பழங்குடிகள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை: அமைச்சர் மா.சுப்ரமணியன்
சென்னை, கோவை போன்ற கொரோனா ஹாட்ஸ்பாட்களில் கூடுதல் கவனம் செலுத்தி தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்படும். அதேபோல், பழங்குடிகள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், சுற்றுலாத் தளங்களில் வசிப்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசியில் முன்னுரிமை அளித்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.
பழங்குடிகள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், சுற்றுலாத் தளங்களில் வசிப்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசியில் முன்னுரிமை அளித்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.
நாடு முழுவதும், பிரதமரின் புதிய கொரோனா தடுப்பூசித் திட்டம் நேற்று செயல்படத் தொடங்கியநிலையில் தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 3.9 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா தடுப்பூசித் திட்டம் குறித்து பேசுகையில், "அடுத்த சில வாரங்களில் மூன்றாவது அலையை எதிர்பார்க்கலாம் என மருத்துவ வல்லுநர்களும், மத்திய அரசும் எச்சரிக்கின்றனர். இந்நிலையில், தடுப்பூசித் திட்டத்தை வேகமாக செயல்படுத்த வேண்டும். சென்னை, கோவை போன்ற கொரோனா ஹாட்ஸ்பாட்களில் கூடுதல் கவனம் செலுத்தி தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்படும்.
பழங்குடிகள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், சுற்றுலாத் தளங்களில் வசிப்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசியில் முன்னுரிமை அளித்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். ஜூன் இறுதிக்குள் இதை செயல்படுத்துமாறு நீலகிரி ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன். வேளாங்கன்னி, நாகூர், நாகப்பட்டினத்திலும் இதே வேகத்தில் தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்படும். இதனால், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய நம்பிக்கை கிடைக்கும். அரியலூர், செய்யாறு, ராணிப்பேட்டை, நீலகிரி ஆகிய இடங்களில் தடுப்பூசிக்கு தகுதியானோரின் எண்ணிக்கை வெறும் 6 லட்சத்துக்கும் கீழாகவே இருக்கிறது. ஆகையால் இந்தப் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி உடனடியாக அனைவருக்கும் தடுப்பூசியை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டங்களில், இரண்டு டோஸ்களையும் சேர்த்து 9.8 லட்சம் முதல் அதிகபட்சமாக 11.3 லட்சம் தடுப்பூசிகளே தேவைப்படுகின்றன.
சென்னை, கோவைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. சென்னையில் 20% பேருக்குக் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. கோயமுத்தூரில் இதுவரை 13% மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. மாவட்டங்களில் தடுப்பூசி வேகத்தை ஒப்பிடும்போது சில இடங்களில் வேகமாகவும் ஒருசில இடங்களில் மிகமிக மந்தமாகவும் உள்ளது. மார்ச் மாதத்தில் சராசரியாக ஒரு நாளில் 83,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதுவே, ஏப்ரல், மே மாதங்களில் முறையே 94,000 மற்றும் 99,000 ஆக இருந்தது. கடந்த 20 நாட்களாகவே ஒரு நாளைக்கு சராசரியாக ஒன்றரை லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் இந்த வேகத்தில் மத்திய அரசு மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறது. ஜூலை மாதத்தில் 71 லட்சம் கரோனா தடுப்பூசிகளை வழங்குவதாக மத்திய அரசு உறுதியளித்திருக்கிறது" என்றார்.
மாநில தொற்றுநோய்த் தடுப்பு திட்டத்தின் இயக்குநர் மருத்துவர் வினய்குமார் கூறுகையில், "ஜனவரி தொடங்கியதிலிருந்து தமிழ்நாட்டுக்கு 1.29 கோடி கரோனா தடுப்பூசி அனுப்பப்பட்டுள்ளது. இதில் கோவேக்சின், கோவிஷீல்டு இரண்டுமே அடங்கும். திங்கள் கிழமை தடுப்பூசித் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியபோது 5.94 தடுப்பூசிகள் இருந்தன. ஒரேநாளில் 3.9 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசிகளை மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்வது என்பது கையிருப்பைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது" என்றார்.