கரூர் தென்னிலை அருகே 2 வாகனங்கள் மோதல் - விபத்தில் 4 பேர் உயிரிழந்த சோகம்
அதிகாலை நேரத்தில் விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கரூர், தென்னிலை அருகே இரண்டு வானங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். நான்கு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டையில் உள்ள குலதெய்வ கோவிலில் வழிபாட்டை முடித்துவிட்டு பொள்ளாச்சி கிணத்துக்கடவிற்கு தோஸ்த் வாகனத்தில் பத்து நபர்கள் ஊருக்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது, காங்கேயத்திலிருந்து திருச்சிக்கு தார் ஏற்றி சென்ற மற்றொரு கனரக வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இதில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. இறந்தவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தென்னிலை போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை நேரத்தில் விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
முதற்கட்ட விசாரணையில் கோவை கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த நதியா உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்ததும், பாலச்சந்திரன், கோவர்தனி, பன்னீர்செல்வம், ரூபன் என நான்கு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. காவல்துறை அளித்த தகவலின் பேரில், உறவினர்கள் மருத்துவமனை விரைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்