Transgender: விழுப்புரத்தில் முதல் முறையாக திருநங்கைகளுக்கான குறைத்தீர்க்கும் கூட்டம்
விழுப்புரத்தில் முதல் முறையாக திருநங்கைகளுக்கான குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தலைமையில் நேற்று (14.07.2023) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்,
திருநங்கைகள் சமூகத்தில் பாதுகாப்பினை உறுதி செய்திடவும், சுயமாகவும், சுதந்திரமாகவும் செயல்படும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், திருநங்கைகளுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தினை ரூ.1,000/-த்திலிருந்து ரூ.1,500/-ஆக உயர்த்தி வழங்கி திருநங்கைகளின் வாழ்வாதாரத்தினை காத்து வருகிறார்கள். இதுமட்டுமல்லாமல், மாவட்டந்தோறும் திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடத்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில், இன்றைய தினம் திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசால், 2008-ஆம் ஆண்டு திருநங்கைகள் நலவாரியம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம், திருநங்கைகளுக்கான தேசிய அளவிலான இணையதளம் 25 நவம்பர் 2020 அன்று தொடங்கப்பட்டது. இதன் காரணமாக, திருநங்கைகள் அலுவலகத்திற்கு வராமலேயே இணையதளம் மூலம் விண்ணப்பித்து அடையாள அட்டை மற்றும் அடையாள சான்றிதழினை பெற்று வருகிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 274 திருநங்கைகளில் 25 திருநங்கைகள் இறப்பு, 37 திருநங்கைகள் இடம் பெயர்ந்துள்ளார்கள். மீதமுள்ள 212 திருநங்கைகள் தற்பொழுது மாவட்டத்தில் வசித்து வருகின்றனர்.
2021 - 2022-ஆம் ஆண்டில் திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்காக மர்லிமா என்ற திருநங்கைக்கு 25 ஆண்டு சேவையை பாராட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருக்கரங்களால் ஒரு இலட்சம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில், இதுவரை 45 திருநங்கைகளுக்கு தலா ரூ.50,000/- சுயதொழில் மானியமும், தலா ரூ.4,000/-வீதம் 118 திருநங்கைகளுக்கு ரூ.4,72,000/- மதிப்பில் கொரோனா நிவாரண நிதியுதவியும், 210 திருநங்கைகளுக்கு அடையாள அட்டையும், 47 திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையும், 51 திருநங்கைகளுக்கு வீட்டுமனைப்பட்டாவும், 67 திருநங்கைகளுக்கு குடும்ப அட்டையும், 6 திருநங்கைகளுக்கு தையல் இயந்திரமும் வழங்கப்பட்டுள்ளது.
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், திருநங்கைகளின் பெரும்பாலான கோரிக்கையாக இருப்பது சுயமாக சுயதொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி, மாதாந்திர ஓய்வூதியத்தொகை, மருத்துவ காப்பீடு அட்டை, இலவச வீட்டுமனைப்பட்டா, பசுமை வீடு போன்ற பல்வேறு கோரிக்கைகளாகும். எனவே, திருநங்கைகள் தங்கள் அடிப்படை தேவைகளை கோரிக்கை மனுக்களாக வழங்கினால் உடனடி தீர்வின் மூலம் தீர்வுகாணப்பட்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
தொடர்ந்து, கோலியனூர் ஊராட்சி ஒன்றியம், அய்யங்கோவில்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள திருநங்கைகள் குடியிருப்பு பகுதியினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, திருநங்கைகளுடன் கலந்துரையாடியபோது, இப்பகுதியில் மதில் சுவர், சாலை வசதி, தெருவிளக்கு வசதி, நாள்தோறும் குடிநீர் வசதி, குடியிருப்புகளுக்கு மின்சார வசதி, சிட்டா உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். உடனடியாக துறை சார்ந்த அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டதுடன், திருநங்கைகளிடம் தங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்து கொடுக்கப்படும். தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்.