கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்... தாமாக முன்வந்து விசாரிக்கும் மனித உரிமைகள் ஆணையம்
கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தை, மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 17 வயதான பிரியாவிற்கு, கொளத்தூர் பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதைதொடர்ந்து, அவரது உடல்நிலை மோசமடையவே ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியா உயிரிழந்தார். இதுதொடர்பாக அரசு மருத்துவர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணம் குறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது. சம்பவம் தொடர்பாக ஆறு வாரங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவும் சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமைகள் ஆணைய புலன் விசாரணை பிரிவிற்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், பிரியா மரணம் தொடர்பான வழக்கை மனித உரிமைகள் ஆணைய தலைவர் எஸ்.பாஸ்கரன் விசாரணைக்கு எடுத்துள்ளார்.