5 ஆண்டு நீதி போராட்டத்தில் வென்ற மீனவர்: அப்படி என்ன விதிகளை மீறியது ‛ரேடிசன் ப்ளூ’ ரிசர்ட்
மீனவர் ஒருவரின் 5 ஆண்டு போராட்டத்தில் பலனாக பிரபல ரேடிசன் புளூ ரிசர்டின் ஒரு பகுதியை இடிக்கவும், 10 கோடி அபராதமும் விதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கடற்கரையில் இருந்து 200 மீட்டர் தொலைவில் கட்டப்பட்டுள்ள 1,100 சதுர மீட்டர் அளவுள்ள கட்டிடத்தை 2 மாதத்திற்குள் இடிக்க வேண்டும், சுற்றுச்சூழலை பாதித்ததற்காக மாநில கடலோர ஒழுங்கு மண்டல ஆணையத்துக்கு ரூ.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என மாமல்லபுரத்தில் உள்ள பிரபல ரிசர்ட்டான ரேடிசன் புளூவிற்கு பசுமை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பு தான் இது, ஏன் இந்த தீர்ப்பு? என்ன நடந்தது ரேடிசன் புளூ ரிசார்டில்?
சென்னையை சேர்ந்த மீனவர் நல சங்க நிர்வாகி செல்வகுமார் சார்பில் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் கடந்த 2016-ம் ஆண்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. "மாமல்லபுரம் கடலோரப் பகுதியில் தனியார் விடுதிகள் மற்றும் ரிசாட்டுகள் இயங்கி வருகின்றன. அவற்றில் சில, கடலோர ஒழங்குமுறை மண்டல விதிகளின் கீழ் பெற்ற அனுமதி பரப்பை விட கூடுதலாக, விதிகளை மீறி விரிவாக்கம் செய்து, அங்கு கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளன. இந்த விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்பது தான் அந்த மனுவின் சாராம்சம்.
இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாய அமர்வு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கொண்ட வல்லுநர் குழுவை கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரியில் விசாரணைக்கு அமைத்தது. இந்த வல்லுநர் குழு பல மாதங்கள் ஆய்வறிக்கையை தாக்கல் செய்யாததால், அதற்கு பசுமை தீர்ப்பாயம் கண்டனமும் தெரிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரியில் வல்லுநர்கள் குழு தாக்கல்செய்த அறிக்கையில் "தொடர்புடைய தனியார் விடுதிகள், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின் கீழ் பெற்ற அனுமதி பரப்பை விட கூடுதலான பரப்பில்விடுதியை விரிவாக்கம் செய்துள்ளது உண்மை என தெரியவந்திருப்பதாக,’ தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அது தொடர்பான விசாரணை நடந்து வந்த நிலையில் அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்த போது தான் ரிசார்ட் நிர்வாகத்திற்கு அதிர்ச்சியளிக்கும் தீர்ப்பு வெளியானது. ‛விதிகளை மீறி, கடல் உயரலைக் கோட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவு வரை 1100.37 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டியுள்ள கட்டுமானத்தை 2 மாதங்களுக்குள் இடிக்க வேண்டும் என்றும், மாசுகட்டுப்பாட்டு வாரியம் அதை இடிக்கும் என்றும்,’ உத்தரவிட்ட தீர்ப்பாயம்,
விதிமீறலில் ஈடுபட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்திய ஓட்டல் நிர்வாகத்திற்கு ரூ.10 கோடி அபராதம் விதித்து அதை மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் செலுத்தவும் உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி விதிமீறலை ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த மனுதாரர் செல்வக்குமாருக்கு ஓட்டல் நிர்வாகம், 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
2016ல் தொடரப்பட்ட வழக்கில் 5 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு வந்தாலும், அது முறையீட்டாளரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த உத்தரவை சற்றும் எதிர்பாராத ரிசார்ட் நிர்வாகம், செய்வதறியாது திகைத்து நிற்கிறது. அத்துமீறி கடற்கரைகளை அபகரிக்கும் இது போன்ற செயலை தடுக்க முன்கூட்டிய அதிகாரிகள் முன் வந்தால், முறையீடுகள் தவிர்க்கப்படும்.