விழுப்புரம் : வண்டல் மண் அள்ளப்படுவதை கண்டித்து பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்
விழுப்புரம் அருகே ஏரியில் அளவுக்கு அதிகமாக வண்டல் மண் அள்ளப்படுவதை கண்டித்து பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்
விழுப்புரம்: ஜானகிபுரத்தில் இருந்து வளவனூர் வழியாக புதுச்சேரி சென்று தஞ்சாவூரை இணைக்கும் தேசிய புறவழிச்சாலை பணிகள் கடந்த 6 மாதங்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்பணிகளுக்காக விழுப்புரம் அருகே உள்ள ஆனாங்கூர் ஏரி பகுதியில் இருந்து அனுமதி பெற்று வண்டல் மண் அள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பொதுப்பணித்துறை சார்பில் ஏரி பகுதியில் இருந்து 6 அடி ஆழத்திற்கு மட்டுமே பள்ளம் தோண்டி வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை பணிக்கான ஒப்பந்ததாரர்கள் விதியை மீறி 20 அடிக்கும் மேலாக ஏரியில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி மண் எடுத்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
மேலும் அனுமதிக்கப்பட்ட அளவினை மீறி ஏரியில் இருந்து மண் அள்ளுவதை பார்த்த ஆனாங்கூர் கிராம விவசாயிகள், பொதுப்பணித்துறை மற்றும் காவல் துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஆனாங்கூர் கிராம விவசாயிகள், அந்த ஏரி பகுதிக்கு திரண்டு சென்று அங்கு மண் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் எந்திரம் மற்றும் டிப்பர் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏரியில் விதியை மீறி அளவுக்கு அதிகமாக பள்ளம் தோண்டி மண் அள்ளப்படுவதை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆனாங்கூர் ஏரி பாசனத்தை நம்பி 1,500 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் உள்ள நிலையில் 20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி வண்டல் மண் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிப்படையும் என்றும் இதே நிலைமை நீடித்தால் வரும்காலங்களில் ஏரி பாசனம் மூலம் விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்படும் என்று விவசாயிகள் வேதனையுடன் கூறினர்.
இதையடுத்து இதுபற்றி பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் அளித்தனர். அதன்பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு நேரில் வந்து, இதுசம்பந்தமாக உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகளிடம் உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்