வெந்து தணிந்தது நாடு… தமிழகத்தில் பல இடங்களில் பலத்த மழை… அடுத்த 4 நாட்களுக்கான வானிலை ரிப்போர்ட்!
தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக வரும் நாட்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில், கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் நேற்று பிற்பகல், திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து சூறைகாற்றுடன் பலத்த மழை பெய்தது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான திருமாஞ்சோலை, புதூர், வள்ளிப்பட்டு, பள்ளிப்பட்டு, ஜாப்ராபாத், மதனாஞ்சேரி, உதயேந்திரம் ஆகிய பகுதிகளில் சாலைகளில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சூறாவளி காற்றால் செட்டியப்பனூர் பகுதியில் சாலை ஓரம் இருந்த தென்னை மரம் ஒன்று மின்சார கம்பி மீது விழுந்ததில் மின் கம்பம் சேதம் அடைந்து மின்சாரம் தடைபட்டது. பின்னர் மின்சார துறையினர் விரைந்து சென்று மின் கம்பிகளை சரி செய்து சாலை நடுவில் இருந்த தென்னை மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல குண்டாறு, குண்டன்சோலை, மன்னவனூர், கூக்காள் உள்ளிட்ட மலை கிராமங்களிலும் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதனால் கடந்த சில நாட்களாக நகரில் நீடித்து வந்த வெப்பத்தின் தாக்கம் அடியோடு குறைந்தது. நேற்று மாலை முதல் நகர் பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்தது. இந்த மழை இரவு வரை நீடித்தது. மேலும் வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தும் முற்றிலும் நின்றது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். அப்சர்வேட்டரியில் 77.4 மி.மீ., ரோஜா கார்டன் பகுதியில் 80.5 மி.மீ. மழையளவு பதிவானது. சராசரியாக கொடைக்கானலில் நேற்று மட்டும் 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இது மாநிலத்திலேயே அதிகபட்ச மழை பதிவாகும்.
இதேபோல் தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், லோயர்கேம்ப், சுருளிபட்டி, ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்ற விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக வரும் நாட்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
25.03.2022: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
26.03.2022: தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
27.03.2022: தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.
28.03.2022: தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
இதில் எந்த நாளிலும் மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என்றும் மீன் பிடிக்க செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): கொடைக்கானல் (திண்டுக்கல்) 8, பிளவக்கல் (விருதுநகர்), ராஜபாளையம் (விருதுநகர்) தலா 6, குன்னூர் (நீலகிரி), ஆண்டிபட்டி (தேனி) தலா 4, பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), கெட்டி (நீலகிரி), சின்னக்கள்ளர் (கோவை), ஆழியாறு (கோவை), சிவகிரி (தென்காசி), புதுச்சத்திரம் (நாமக்கல்) தலா 3, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), வறளியாறு (நீலகிரி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), சங்கரிதுர்க் (சேலம்), சூலூர் (கோவை), ராசிபுரம் (நாமக்கல்), உதகமண்டலம் (நீலகிரி), மேல் பவானி (நீலகிரி) , பாப்பிரெட்டிப்பட்டி (தருமபுரி), அவலாஞ்சி (நீலகிரி) தலா 2, பல்லடம் (திருப்பூர்), ஏற்காடு (சேலம்), அமராவதி அணை (திருப்பூர்), சேலம் (சேலம்) தலா 1.