கைதிகளால் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள்.. நெகிழ்ந்து பேசிய ஆளுநர் தமிழிசை
சிறை வளாகத்தில் கைதிகளால் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் மற்றும் மூலிகை செடிகளை பார்க்கும்போது உற்சாகமாக உள்ளது - ஆளுநர் தமிழிசை
தண்டனைக்காலம் முடிந்து புதுச்சேரி சிறையில் இருக்கும் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க என்னென்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அது எடுக்கப்படும் எனவும், காரைக்காலில் இரண்டு ஆண்டுகளில் புதிய கிளை சிறை கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி அடுத்த காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் 200-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளின் மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த சிறைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள 36 ஏக்கரில் 3 ஏக்கர் கைதிகளால் சமன்படுத்தப்பட்டு ஒருங்கிணைந்த பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட 60 வகையான பழம், மூலிகை, காய்கறி என 50 ஆயிரம் செடிகள், கொடிகள் நடப்பட்டுள்ளன. இதுமட்டுமன்றி உரம், பூச்சிக் கொல்லிகள் தயாரிக்க சிறை வளாகத்தில் மாடு, ஆடு மற்றும் முயல் வளர்க்கப்படுகிறது. இவற்றையும் கைதிகளே பராமரிக்கின்றனர். கைதிகள் பயிரிட்ட செடி, கொடிகளில் இருந்து கத்தரிக்காய், மாங்காய், எலுமிச்சை, பப்பாளி, கீரைகள், முள்ளங்கி, பலா, வெண்டை மற்றும் மஞ்சள் சாமந்தி பூக்களும் சமீபத்தில் அறுவடை செய்யப்பட்டது.
இந்நிலையில், துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சிறைச்சாலையில் உள்ள ஒருங்கிணைந்த பண்ணையை இன்று நேரில் சென்று பார்வையிட்டார். கைதிகளின் மன அழுத்தத்தைப் போக்கவும் அவர்களை நல்வழிப்படுத்தவும் சிறைத்துறை நிர்வாகம் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளையும், சிறைக்கைதிகள், பாரம்பரிய முறையில் இயற்கை உரத்தை பயன்படுத்தி காய்கறிகள், பழங்கள், பயிர் வகைகள் சாகுபடி செய்திருப்பதையும் வெகுவாகப் பாராட்டினார். அங்குள்ள கைதிகளிடம், சிறையில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து சிறை வளாகத்தில் மரக்கன்றுகளை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நட்டார். அப்போது சிறைத் துறை ஐ.ஜி ரவிதீப் சிங் சாகர் மற்றும் சிறைத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
செய்தியாளர்களிடம் துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறியதாவது: சிறை வளாகத்தில் அதிகாரிகளும், கைதிகளும் சிறப்பாக பணியாற்றி இயற்கை உரத்தை பயன்படுத்தி காய்கறிகள், பழங்கள், பயிறு வகைகளை சாகுபடி செய்து விளைவித்துள்ளனர். இது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அவர்களை ஊக்கப்படுத்த வந்த நான், ஊக்கம் பெற்றேன். இங்குள்ள பயிர்களை பார்க்கும்போது உற்சாகமாக உள்ளது. சிறையில் விளைவிக்கப்படும் பயிர்களை விற்பனை செய்ய உழவர் சந்தையில் இடம் ஒதுக்க வேண்டுமென கேட்டுள்ளனர். மேலும், கைதிகள் தாங்கள் உழைக்க தயாராக இருக்கிறோம். பயிர் செய்ய இன்னும் கூடுதல் நிலம் தாருங்கள் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.