Erode East Bypoll: “ஈரோடு கிழக்கில் அதிமுகவே போட்டியிடும்” - கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை தமாகா ஏற்கிறது என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் ஈரோடு கிழக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் காங்கிரஸை எதிர்த்து அதிமுகவின் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் யுவராஜா போட்டியிட்டார்.
இதனால் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே அதிமுக மூத்த நிர்வாகிகள் நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், கூட்டணி தலைவர்களுடன் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட வேண்டும் என்ற அக்கட்சியின் விருப்பத்தை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஏற்பதாக அதன் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியின் சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் இயக்கத்திற்கு ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இத்தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளராக எம். யுவராஜா அறிவிக்கப்பட்டு போட்டியிட்டார்கள்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அனைத்துதரப்பு மக்களும் வசிக்கிறார்கள். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அறிவித்த பொய்யான வாக்குறுதிகளையும் மீறி, எங்கள் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கடின உழைப்பால், வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற்று 58,396 வாக்குகள் பெற்றோம். தொடர்ந்து அத்தொகுதியில், கடந்த 20 மாதங்களாக மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறோம்.
தற்போது எதிர்பாராத சூழல் காரணமாக ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (ஜனவரி 19) காலை அ.இ.அ.தி.மு.க வின் முன்னாள் அமைச்சர்கள் என்னை இயக்கத்தின் தலைமை அலுவகத்தில் சந்தித்து சந்தித்து இடைத்தேர்தல் குறித்து பேசினார்கள்.
அப்போது இந்த இடைத்தேர்தலில் அதிமுகவின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அ.இ.அ.தி.மு.க வின் விருப்பத்தை என்னிடம் தெரிவித்தார்கள். அதன் அடிப்படையில் தமிழ் மாநில காங்கிரஸின் மூத்த தலைவர்களுடனும், நிர்வாகிகளுடனும் ஆலோசனை செய்தேன்.
மேலும் தற்போதைய அரசியல் சூழல், எதிர்கால நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கூட்டணியின் கட்சியான அதிமுக வின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அதிமுகவின் விருப்பத்தை தமிழ் மாநில காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது.
தமிழக மக்கள் நலன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நலன் ஆகியவற்றை மிக முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனவே ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தமிழ் மாநில காங்கிரஸின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் களப்பணி ஆற்றி கூட்டணி கட்சியின் வேட்பாளரது வெற்றிக்கும், கூட்டணிக்கும் உறுதுணையாக இருப்பார்கள் என்பதை கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.