Erode By Election: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்... தொடங்கியது வேட்புமனு தாக்கல்..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் - பிப்ரவரி 7ம் தேதியும், வேட்புமனுக்கள் மீது பிப்ரவரி 8ம் தேதி பரிசீலனை நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் தாக்கலாகும் வேட்புமனுக்களை திரும்ப பெற பிப்ரவரி 10ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் முற்பகல் 11 மணி முதல் மாளை 3 மணிவரை மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட வேண்டும். வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பிப்ரவரி 5ம் தேதி ஞாயிற்றுகிழமை என்பதால் வேட்பு மனு தாக்கல் செய்ய இயலாது.
திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 3ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார். அன்றைய நாளில் தேமுதிக சார்பாக அக்கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளர் ஆனந்த் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார்.
தொடர்ந்து, அமமுக சார்பில் சிவபிரசாந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் ஆகியோரும் வேட்பு மனுத்தாக்கல் செய்ய இருக்கின்றனர்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டி:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவை கேட்கவுள்ளோம் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். ஏற்கனவே ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் கமல் பங்கேற்றிருந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தற்போது ஆதரவு கோர இருக்கிறது. இதற்கு கமல்ஹாசன் கண்டிப்பாக பச்சைக்கொடி காட்டுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியின்கீழ் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகன் ஈவேரா வெற்றி பெற்றிருந்தார். அவர் மாரடைப்பு காரணமாக எதிர்பாராத விதமாக உயிரிழக்க, அங்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.
பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப் பதிவும், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே ஆளும் கட்சியாக உள்ள திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி களமிறங்குகிறது. மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.