(Source: ECI/ABP News/ABP Majha)
Erode By Election 2023: ஈரோடு தேர்தல் தொடர்பான அதிமுக வழக்கு.. நாளை விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்..!
ஈரோடு கிழக்கு தேர்தலை நேர்மையாக நடத்துக்கோரி அதிமுக தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெறுகிறது.
ஈரோடு கிழக்கு தேர்தலை நேர்மையாக நடத்துக்கோரி அதிமுக தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெறுகிறது. இடைத்தேர்தலை நியாயமாக நடத்த நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட சி.வி. சண்முகம் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதையடுத்து, இந்த வழக்கானது பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பாத சக்கரவர்த்தி அமர்வு வழக்கை நாளை விசாரிக்கிறது.
கடந்த ஜனவரி 4 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் அந்த தொகுதியில் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலை நியாத்துடனும், நேர்மையுடன் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி அதிமுக அமைப்பு செயலாளர் சிவி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதுகுறித்து அவர் அளித்த மனுவில், ”தொகுதியின் வாக்காளர் பட்டியலை சரி பார்த்த போது, அதில் இடம்பெற்றிருந்த பலர் தொகுதியில் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக இறந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை. பல வாக்காளர்களின் பெயர்கள் 2க்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையான 2,26, 876 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 7, 947 இறந்தவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து இன்னும் நீக்கப்படாமல் உள்ளது. 30,056 வாக்காளர்கள் தொகுதியில் வசிக்கவில்லை. இவர்களின் பெயர்களில் கள்ள ஓட்டு போட வாய்ப்புள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, நாளை இந்த வழக்கானது பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பாத சக்கரவர்த்தி அமர்வில் விசாரிக்கப்பட இருக்கிறது.
திமுக கூட்டணி சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியே போட்டியிடுகிறது. அக்கூட்டணியின் வேட்பாளராக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
வேட்பாளர்கள் யார்? யார்?
இதேபோல் அதிமுக சார்பில் அந்த தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு போட்டியிடுகிறார். மேலும் நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா, தேமுதிக கட்சி சார்பாக ஆனந்த் ஆகியோரும் களம் காண்கின்றனர். பின்னர், வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கை சின்னமும், தென்னரசுக்கு இரட்டை இலை சின்னமும், ஆனந்துக்கு முரசு சின்னமும், மேனகாவுக்கு கரும்பு விவசாயி சின்னமும் ஒதுக்கப்பட்டது.
இதற்கிடையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் களைக்கட்டியுள்ளது. விதவிதமாக மக்களை கவரும் நடவடிக்கையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எதிர்க்கட்சியினர், தொண்டர்கள் என பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.