EPS Press Meet: "வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு..! அ.தி.மு.க. எழுச்சி பெறும்..!" - ஆனந்தத்தில் எடப்பாடி பழனிசாமி
EPS Press Meet: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எழுச்சியுடன் வெற்றி பெறும் என்று அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.-விற்கு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு கிடைத்துள்ளதாகவும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. எழுச்சியுடன் வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தொண்டர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அ.தி.மு.க. எழுச்சி:
உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு மூலம் ஒன்றரை கோடி தொண்டர்களின் அ.தி.மு.க. எழுச்சி பெற்றுள்ளது. அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது. கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்று சிலர் செய்த சூழ்ச்சி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் வீழ்த்தப்பட்டுள்ளது. அ.தி.மு.க. கட்சி பல்வேறு சோதனைகளை சந்தித்துள்ளது. இதுவும் அப்படியே. இன்றைக்கும் கட்சி உச்சநீதிமன்றத்தின் உதவியுடன் சோதனையை வென்றிருக்கிறது.
ஜனநாயக படுகொலை:
இடைத்தேர்தல் வெற்றி பற்றி கூறுகையில், இந்த தேர்தலில் வெற்றி பெறும் என்றும், தி.மு.க. அரசில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் நிறைய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளனர். சாலை விரிவாக்கம், பாலங்கள் கட்டியது, ஸ்மார்ட் சிட்டி போன்றவைகளை சொல்லலாம்.
ஈரோடு கிழக்கில் தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடு செய்யப்படுவது குறித்து பேசுகையில், “ தேர்தல் ஆணையம், காவல் துறை செயல்படுகிறதா என்றே தெரியவில்லை. தமிழ்நாட்டில் நிலவுகின்ற ஜனநாய படுகொலையை மக்களுக்கு உணர்த்த ஊடகங்கள் செயல்பட வேண்டும். என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.