(Source: ECI/ABP News/ABP Majha)
EPS Condemns: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 5 பேர் பலி? ஈபிஎஸ், அண்ணாமலை கண்டனம்..!
EPS Condemns: திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாய் ஓடுவதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
EPS Condemns: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயத்தால் 5 பேர் பலியானதற்கு காரணமான நபர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி கண்டனம்:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ”கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 5 பேர் உயிரிழந்ததாகவும் 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் வருகின்ற செய்திகள் கவலையளிக்கின்றன. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் , வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விடியா திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாய் ஓடுவதை தொடர்ச்சியாக நான் சுட்டிக்காட்டி வந்தும், இதனால் ஏற்கனவே பல உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும் கூட கள்ளச்சாராயத்தை ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். "கள்ளச்சாராயம் இல்லை- மெத்தனால்" என்று சொன்னது போல மக்கள் வாழ்க்கை விஷயத்தில் வார்த்தை விளையாட்டு விளையாடாமல், கள்ளச்சாராயத்திற்கு எந்த பெயர் இருந்தாலும் அதனை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 5 பேர் உயிரிழந்ததாகவும் 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் வருகின்ற செய்திகள் கவலையளிக்கின்றன. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் , வருத்தங்களையும்…
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) June 19, 2024
அண்ணாமலை கண்டனம்:
அண்ணாமலை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “மரக்காணம், மதுராந்தகம் பகுதிகளில், கள்ளச்சாராயத்துக்கு 23 உயிர்களைப் பறிகொடுத்து ஒரு ஆண்டே ஆன நிலையில், கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த, திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெளிவாகியிருக்கிறது.
கள்ளச்சாராய வியாபாரிகளுடன், திமுக அமைச்சர் திரு மஸ்தான் நெருங்கிய தொடர்பில் இருந்த விவரம் கடந்த ஆண்டே தெரியவந்தும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கண்துடைப்புக்காக நாடகமாடி, மீண்டும் ஐந்து உயிர்களைப் பறித்திருக்கும் திமுக அரசுக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகம் முழுவதும் ஆறாக ஓடும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் திறனில்லாமல் தொடர்ந்து உயிர்கள் இழப்பிற்குப் பொறுப்பான மதுவிலக்குத் துறை அமைச்சர் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும். கள்ளச்சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருக்கும் அமைச்சர் திரு மஸ்தான் மற்றும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காத துறை அமைச்சர் திரு முத்துசாமி ஆகிய இருவரையும் உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்
அவர்களை வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளசாராய மரணமா?
கள்ளக்குறிச்சி அருகே கருனாபுரம் பகுதியில் நேற்று கள்ளச்சாரயம் விற்கப்பட்டதாகவும் அதனை வாங்கி அருந்திய 3 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் அவர்களது குடும்பத்தினர் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளனர். பிரவீன், சுரேஷ் என்ற இரண்டு இளைஞர்களும் சேகர் என்பரும் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்று பேர் உயிரிழந்ததற்கு காரணம் கள்ளச்சாரயம்தான் என்றும், இதன்பிறகாவது எந்த உயிர்களும் போகாமல் இருக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடும்பத்தினர்கள் கண்ணீருடன் பேட்டி கொடுத்துள்ளனர்.