சொத்து வரி உயர்வு.. திமுக ஆட்சியில் பல பம்பர் பரிசு இருக்கு.. இபிஎஸ்-ன் கிண்டல் பதிவு!
இந்த சொத்து வரி உயர்வு வெறும் ட்ரெய்லர்தான் இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கின்றன.
சொத்துவரி உயர்வு போல் பல பம்பர் பரிசு காத்திருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளும் கட்சியை கிண்டல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பரிசாக பொங்கல் சிறப்புத் தொகையை தராமல் கைவிரித்த இந்த விடியா அரசு தற்போது நகர்ப்புற உள்ளாட்சியில் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு சிறப்பு பரிசாக 150% வரை சொத்து வரி உயர்வை அளித்துள்ளது. இந்த சொத்து வரி உயர்வு வெறும் ட்ரெய்லர்தான் இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கின்றன’ எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான் இனிவரும் காலங்களில் மக்களுக்கு
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) April 2, 2022
பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது.(2/2)
முன்னதாக, சொத்துவரியை அதிகரித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதில், கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட விலைவாசி உயர்வு, பணியாளர்களின் ஊதிய உயர்வு, பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை தேவை மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி பராமரிப்பு செய்தல் போன்றவற்றிற்கு தேவைப்படும் கூடுதல் செலவீனம் ஆகியவற்றை கருத்தில் கொண்டும். அடித்தட்டு மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டும் சொத்து வரி சீராய்வு செய்யப்படுகிறது.
அதன்படி, 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 25 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 601 முதல் 1200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 1201 முதல் 1800 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 1800 சதுர அடிக்கு அதிகமாக பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 100 சதவீதம் சொத்துவரி உயர்வு செய்யப்படவுள்ளது. தற்போது உள்ள சொத்து வரியில், வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 100 சதவீதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய பயன்பாட்டு கட்டடங்களுக்கு 75 சதவீதமும் உயர்த்தப்படுகிறது.
தற்போது சொத்து வரி சீராய்வு 2022-2023-ஆம் ஆண்டிற்கான முதலாம் அரையாண்டு முதல் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. தற்போது, தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நடைமுறையில் உள்ள சொத்து வரியானது, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநகரங்கள் மற்றும் நகரங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக உள்ளது.
சென்னை மாநகராட்சியில், 600 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடத்திற்கு தற்போது விதிக்கப்படும் குறைந்தபட்ச சொத்துவரி ரூ.810 ஆகும். சீராய்விற்குப் பிறகு, இது ரூ.1215 ஆக உயரும். ஆனால், இதே பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டடத்திற்கு, மும்பையில் ரூ.2,157 ஆகவும், பெங்களூருவில் ரூ.3,464 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.3,510 ஆகவும் மற்றும் புனேவில் ரூ.3,924 ஆகவும் உள்ளது.
சென்னை மாநகராட்சியில், 600 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டடத்திற்கு தற்போது விதிக்கப்படும் அதிகபட்ச சொத்துவரி ரூ.3,240 ஆகும். சீராய்விற்குப் பிறகு, இது ரூ.4,860 ஆக உயரும். ஆனால், இதே பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டடத்திற்கு. பெங்களூருவில் ரூ.8,660 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.15,984 ஆகவும், புனேவில் ரூ.17,112 ஆகவும் மற்றும் மும்பையில் ரூ.84,583 ஆகவும் உள்ளது.