Weather update : தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை தெரியுமா?
தமிழ்நாட்டில் இன்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், தென்தமிழகம் மற்றும் உள்மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை கடலூர், விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, சேலம் மாவட்டங்களில் கனமழையும், பிற மாவட்டங்கள், காரைக்கால், புதுவையில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை மறுநாள் (வரும் 22-ஆம் தேதி) சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும், அதேபோல, வரும் 23-ஆம் தேதி சேலம், தர்மபுரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நேற்று வெளியிட்ட வானிலை அறிவிப்பில் தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறினார். இதன்படி, நேற்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. தலைநகர் சென்னையில் பல இடங்களில் வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டது. இன்று காலையிலும் தலைநகர் சென்னையில் பல இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் 3-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அதுமுதல் தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையோரம் உள்ள மாவட்டங்களிலும், தமிழகத்தின் உள்மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. மாநிலத்தின் தலைநகரான சென்னையிலும் கடந்த மூன்று மாதங்களில் ஓரளவு நல்ல மழை பெய்து வந்ததால் சென்னைக்கு குடிநீ்ர ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகிய ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.