மேலும் அறிய

CM Stalin: கடல் இல்லாச் சேலம், கருப்பு - சிவப்புக் கடலினைக் காணட்டும் - தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

CM Stalin DMK: முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின், இளைஞரணி மாநாடு தொடர்பாக தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

CM Stalin DMK: சேலத்தில் நடைபெற உள்ள இளைஞரணி மாநாட்டில் திரளான தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என, முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்:

முதலமைச்சரு, திமுக தலைவருமான ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “கழகம் வில்லாம்.. நின் அணியே கணையாம்

நம் உயிரினும் மேலான தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல். 

வாழ்வில் ஓர் பொன்னாள் என்று சொல்வது போல ஒரு சில நாட்கள் அமையும்.  போராட்டங்களும் நெருக்கடிகளும் சூழ்ந்த பொதுவாழ்வில் ஆட்சி என்பது சொகுசானதல்ல, அது கூடுதல் பொறுப்பாகும்.

அந்தப் பொறுப்பையேற்று, வருங்காலத்திற்கான தொலைநோக்குப் பார்வையுடன் மக்கள் நலன் காக்கும் திட்டங்களையும், மக்களுக்காகப் பாடுபட்ட தலைவர்களை வருங்காலத் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் நினைவுச் சின்னங்களையும் உருவாக்கும்போது மகிழ்வான தருணங்களாக அமையும். அத்தகைய நாட்கள் ஒவ்வொன்றும் வாழ்வில் ஒரு பொன்னாள்தான். இன்று அத்தகைய ஒரு பொன்னாள். அதற்குக் காரணம், சமூகநீதிக் காவலர் - இந்திய ஒன்றியத்தின் ஏழாவது பிரதமர் வி.பி.சிங் அவர்களின் திருவுருவச் சிலையைத் தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னையில், அதுவும் நான் பயின்ற மாநிலக் கல்லூரியில் முதலமைச்சர் என்ற முறையில் இன்று திறந்து வைக்கும் பெருமிதமான நிகழ்வு நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் திரு.அகிலேஷ் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள, திரு.வி.பி.சிங் அவர்களின் துணைவியார் திருமதி.சீதாசிங் மற்றும் வி.பி.சிங் அவர்களின் குடும்பத்தினர் பங்கேற்கும் இனிய விழாவாக அது அமையவுள்ளது.  

திராவிட முன்னேற்றக் கழகம், தெலுங்குதேசம், ஜன மோர்ச்சா, ஜனதா, காங்கிரஸ்(எஸ்), அசாம் கண பரிஷத், லோக் தளம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேசிய முன்னணி உருவானது. தலைவர் கலைஞர் அவர்களுடன் வி.பி.சிங் அவர்களும், என்.டி.ராமராவ் உள்ளிட்ட தலைவர்களும் பார்வையிட்ட தேசிய முன்னணி தொடக்க விழாப் பேரணியில் கழகத்தின் இளைஞரணி வீறுநடை போட்டு அணிவகுத்து வந்தபோது மிகப் பெரிய அளவில் எழுச்சி ஆரவாரத்தைக் காண முடிந்தது. 

தி.மு.கழகத் தொண்டர்களை உடுப்பணியாத ராணுவம் என்றார் பேரறிஞர் அண்ணா. அந்த உடுப்பணியாத ராணுவம், கலைஞர் காலத்தில் உருவாக்கப்பட்ட இளைஞரணியால், உங்களில் ஒருவனான என்னுடைய தலைமையில் சீருடை தரித்து, உடுப்பணிந்த ராணுவம் போல பேரணிகள் பலவற்றை பீடுநடைபோட்டு, பெருமிதத்துடன் நடத்திக் காட்டியது. தேசிய முன்னணி தொடக்க விழா பேரணி அறிவாலயத்தில் தொடங்கி, அண்ணா மேம்பாலத்தில் ஏறி, அண்ணா சாலையில் அணிவகுத்தபோது வங்கக் கடல்தான் மனிதத் தலைகளாகத் தலைநகர் சென்னையில் புகுந்ததோ என்று அகில இந்தியத் தலைவர்கள் பலர் வியக்கும் வகையிலும், தி.மு.க.வின் அரசியல் எதிரிகள் வியர்க்கும் வகையிலும் பிரம்மாண்டமாக அமைந்தது. 

அதன்பிறகு, 1990-ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டிலும், அதே ஆண்டு முப்பெரும் விழாவை ஐம்பெரும் விழாவாக (பெரியார் - அண்ணா - தி.மு.கழகம் பிறந்தநாள் ஆகியவற்றுடன் டாக்டர் அம்பேத்கர் நூற்றாண்டு மற்றும் மண்டல் கமிஷன் வெற்றி விழா இவற்றையும் இணைத்து) கொண்டாடியபோது, தலைநகர் சென்னை குலுங்க மற்றொரு மாபெரும் பேரணி நடைபெற்றது. இந்த மூன்று பேரணிகளிலும் உங்களில் ஒருவனான என் தலைமையில் பட்டாளத்துச் சிப்பாய்கள் போல கழகத்தின் இளைஞரணியினர் வெண்சீருடையில் வீறுநடை போட்டு வந்ததை சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் கண்டு மகிழ்ந்ததையும், அது குறித்து அவர் ஆச்சரியத்துடன் வினவியபோது, “என் மகன்“ என்று தலைவர் கலைஞர் அவர்கள் சுட்டிக்காட்டி, என் உழைப்புக்கு அங்கீகாரம் வழங்கியதையும் மறக்க முடியாது. 

இளைஞரணியின் பிரம்மாண்டமான பேரணியுடன் தொடங்கப்பட்ட தேசிய முன்னணிக்கு தேர்தல் களத்தில்  முதல் மகத்தான பெரும் வெற்றியைப் பெற்றுத்தந்தவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர்தான். அவர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் 1989 ஜனவரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று, 13 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு ஆட்சியை அமைத்தது. திரு.வி.பி.சிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தான் கட்டி முடித்த வான்புகழ் வள்ளுவர் கோட்டத்தில் முதல் முறையாக கால் பதித்து, மூன்றாவது முறையாக முதலமைச்சர் பொறுப்பினை ஏற்றார்.  உங்களில் ஒருவனான நான் முதன் முதலாக ஆயிரம்விளக்கு தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதும் அந்தத் தேர்தல்களத்தில்தான்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றியைத் தொடர்ந்து 1989-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய முன்னணியின் ஆட்சி அமைந்தது. வி.பி.சிங் அவர்கள் பிரதமர் பொறுப்பினை ஏற்றார். அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தபோது, என்னிடம் தன் அன்பைப் பொழிந்ததுடன், பேரணியை முன்னின்று நடத்தி வந்த பாங்கையும் பாராட்டி மகிழ்ந்தார். அதைவிட அவர் நமக்குத் தந்த பெருமகிழ்ச்சி என்பது, மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி - இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கிடைக்கச் செய்ததுதான். 

திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையான சமூகநீதியை, இந்தியாவின் தவிர்க்க முடியாத அரசியல் கொள்கையாக மாற்றிக் காட்டியவர் வி.பி.சிங். அவருடைய இந்தச் சிறப்பான முடிவின் பின்னணியில் ஊக்கசக்தியாக விளங்கியவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள். சமூகநீதிக் காவலர் எனப் பெயர் பெற்ற வி.பி.சிங் ஆட்சியை, சமூக அநீதியை காலம் காலமாக ஆதரித்தும் - நிலைநாட்டியும் வரும் பா.ஜ.க. கவிழ்த்தது. ஓராண்டு கூட முழுமையாகப் பதவியில் இல்லாவிட்டாலும் இந்தியாவின் மிகச் சிறந்த பிரதமர்களின் வரிசையிலே நிலையான இடத்தைப் பிடித்திருப்பவர் வி.பி.சிங் அவர்கள். அத்தகைய மாமனிதருக்கு இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு அரசின் சார்பில் திருவுருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. அன்று இளைஞரணிச் செயலாளரகவும் இன்று கழகத் தலைவராகவும் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் உள்ள உங்களில் ஒருவனான நான் அதனைத் திறந்து வைக்கின்ற நல்வாய்ப்பினைப் பெற்றுள்ளதால்தான், வாழ்வில் ஒரு பொன்னாள் என்று இந்நன்னாளைக் குறிப்பிட்டேன். 

ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கு முன் சமூகநீதிக்காகவும், மாநில உரிமைக்காகவும் தேசிய முன்னணி தொடங்கப்பட்டபோது, கழகத்தின் இளைஞரணி எத்தகைய எழுச்சிமிக்க பேரணியை நடத்திக் காட்டியதோ, அதுபோல, சமூகநீதியை முற்றிலுமாக அழிக்கத் துடிக்கும் நீட் தேர்வுக்கு எதிராகவும், மாநில உரிமைகளைப் பறித்திடும் ஒன்றிய பா.ஜ.க அரசிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்றுவதற்காகவும் மக்களின் ஆதரவை நாடிக் கையெழுத்து இயக்கத்தையும், இரு சக்கர வாகனப் பரப்புரைப் பேரணியையும் மிகச் சிறப்பாக நடத்தியுள்ளது இன்றைய இளைஞரணி. 

முத்தாய்ப்பாக, டிசம்பர் 17-ஆம் நாள் சேலத்தில் ‘மாநில உரிமை மீட்பு முழக்க’த்துடன் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது. இளைஞரணிச் செயலாளரும் - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான தம்பி உதயநிதி இன்று தன் பிறந்தநாளில் என்னிடம் வாழ்த்துகளைப் பெற்றுள்ளார். அவரை மட்டும் நான் வாழ்த்தவில்லை. இரண்டாவது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்திட வேண்டும் என அயராது பாடுபடும் இருபத்தைந்து இலட்சம் இளைஞரணி உடன்பிறப்புகளையும் நான் வாழ்த்தி மகிழ்கிறேன். 

மாநாட்டை இளைஞரணி நடத்தினாலும் கழகத்தின் ஒவ்வொரு உடன்பிறப்புக்கும் இதில் பங்கேற்கும் உரிமையுண்டு. இந்த மாநாடு, இன்னும் சில மாதங்களில் நாம் எதிர்கொள்ளவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பயிற்சிக் களம். கழகத்தினர் கூடுகின்ற பாசறைக் கூடம். அதனால்தான் நேற்று (நவம்பர் 26) நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தின் மையப் பொருளாக இளைஞரணி மாநாட்டிற்கான ஆயத்தப்பணிகள் குறித்தும், அதனை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 

2007-ஆம் ஆண்டு உங்களில் ஒருவனான என் தலைமையில் இளைஞரணி செயல்பட்டபோது, அதன் வெள்ளி விழா ஆண்டையொட்டி முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இப்போது தம்பி உதயநிதி அமைச்சராக இருப்பதுபோல  அப்போது நான் அமைச்சர். இப்போது நான் முதலமைச்சராக இருப்பதுபோல அப்போது தலைவர் கலைஞர் முதலமைச்சர். இளைஞரணி மாநாட்டுப் பணிகளை நான் முன்னின்று அப்போது மேற்கொண்ட போது, அதன் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து, நெறிப்படுத்தி வழிநடத்தியவர் தலைவர் கலைஞர் அவர்கள்தான். அதே பொறுப்புணர்வுடன்தான் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் என் ஆலோசனைகளை வழங்கியிருக்கிறேன். 

கழகத்தின் சார்பில் நடத்தப்படுகின்ற ஒவ்வொரு மாநாடும் வெற்றிக்கான விரைவுச்சாலை. அதில் கொள்கைப் பட்டாளம் வீறுநடைபோடும். மாநாடு தொடங்குவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே உடன்பிறப்புகளிடம் எழுச்சி உருவாகிவிடும். மாநாடு முடிந்து ஆறு மாதங்கள் கடந்தாலும் உத்வேகம் குறையாத களப்பணி தொடரும். எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளுங்கட்சியாக இருந்தாலும் நம் கொள்கையுணர்வு ஒரு போதும் குறைவதில்லை. 

‘அனைவருக்கும் அனைத்தும்’ என்கிற திராவிட மாடல் ஆட்சியை நாம் நடத்தி வருகிறோம். கலைஞர் உரிமைத் திட்டம், விடியல் பயணத் திட்டம், புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பெண்களின் நலன் காக்கும் திட்டங்கள் நேரடிப் பயன்களைத் தருவதால் தமிழ்நாட்டு பெண்களின் நம்பிக்கைகுரிய இயக்கமாகத் திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே இருக்கிறது. அதுபோல இளைஞர்களுக்கான நான் முதல்வன் திட்டம், திறன் மேம்பாட்டுப் பயிற்சி, புதிய வேலைவாய்ப்புகள், மாவட்டந்தோறும் வேலை வாய்ப்பு முகாம்கள், விளையாட்டுப் பயிற்சிகளுக்கான ஊக்கம் இவற்றை திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வருகிறது. 

பொய்களை விற்று அதில் கூலி பெற்று இளைஞர்களை ஏமாற்றும் கூட்டம் ஒரு புறம், வதந்திகளை பரப்பி - வன்முறையை விதைத்து தமிழ்நாட்டில் கால் ஊன்றி விடலாம் எனத் தப்புக் கணக்கு போடும் கூட்டம் மறுபுறம், தங்களை அடிமைகளாக விற்றுக் கொண்டு தமிழ்நாட்டின் உரிமைகளை அடமானம் வைத்து விட்டுப் போன முதுகெலும்பற்ற கூட்டம் இன்னொரு புறம். இந்த மோசடி அரசியல் சக்திகளை எதிர்கொண்டு, மக்கள் நலன் காக்கும் திராவிட மாடல் ஆட்சியை வழங்கி வரும் தி.மு.கழகமும் அதன் தோழமை சக்திகளும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு - புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் முழுமையாக வென்றாக வேண்டும். அப்போதுதான் இந்திய அளவில் நம் இந்தியா கூட்டணி வலுவான ஆட்சியை அமைக்கும். இளைஞரணி முன்னெடுத்துள்ள நீட் விலக்கு என்ற இலக்கினை வெற்றிகரமாக எட்ட முடியும். மாநில உரிமைகளை மீட்டெடுக்க முடியும். 

இவற்றை மனதில்கொண்டு, இளைஞரணி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செயலாற்ற வேண்டும் என்பதை நேற்றைய கூட்டத்தில் எடுத்துரைத்தேன். தேர்தல்களத்திற்கான பயிற்சிக்களமாக அமையவிருக்கும் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டின் வெற்றி அதனைப் பறைசாற்ற வேண்டும். நெல்லையில் நடந்த இளைஞரணியின் முதலாவது மாநில  மாநாட்டின்போது, புதிய ஆத்திசூடியை வழங்கினார் முத்தமிழறிஞர் கலைஞர். அதில், கழகம் வில்லாம் நின் அணியே கணையாம் என்று எழுதியிருந்தார். களத்தில் பாய்வதற்குத் தயாராக இருக்கும் கணைகளாக இளைஞரணியினர் செயலாற்றி வருகிறார்கள். அவர்களுக்குத் துணை நிற்கவும், இந்தியா திரும்பிப் பார்க்கும் வகையில் மகத்தான வெற்றி மாநாடாக அமையவும் மாநாட்டுத் தலைவர் தம்பி உதயநிதி அழைக்கிறார். 

கழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும், அந்தந்த மாவட்டங்களுக்குட்பட்ட அனைத்துக் கிளைகளிலிருந்தும் தேர்தல் களத்திற்கான வீரர்களாக உடன்பிறப்புகள் திரளட்டும். கடல் இல்லாச் சேலம், கருப்பு - சிவப்புக் கடலினைக் காணட்டும்” என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget