திமுகவின் தேர்தல் வாக்குறுதி கடலில் கரைத்த பெருங்காயம்- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
திமுகவின் தேர்தல் வாக்குறுதி கடலில் கரைத்த பெருங்காயம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
நீட் தேர்வை ரத்து செய்வோம், பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைப்போம் என பல்வேறு விதமான வாக்குறுதிகளை அளித்து, ஆட்சிக்கு வந்த திமுக அரசு தற்போது வரை எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாததை கண்டித்து அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து பதாகைகளோடு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்களித்த மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற பொய்யான வாக்குறுதியால் படித்த மாணவர்களை கூட படிக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வழங்கிய திமுகவின் வாக்குறுதிகள் கடலில் கரைத்த பெருங்காயம் போன்றது என்றார். டிடிவி தினகரன் குறித்த கேள்விக்கு அமமுகவையே இன்று காப்பற்ற முடியவில்லை; தன் கட்சியே நிலைநிறுத்த முடியாதவர்கள் அடுத்தவர்களை பார்த்து பேச கூடாது என பதிலளித்தார். சட்டப்பேரவை நூற்றாண்டு விழா நடைபெறுவது குறித்த கேள்வுக்கு கருணாநிதியின் படத்திறப்பு விழா கொண்டாடுவதிலோ, படத்தை திறப்பதிலோ எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் 1989ஆம் ஆண்டுக்கு பிறகு சட்டமன்றத்தின் வயதை 1937ஆம் ஆண்டில் இருந்து கணக்கிட்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி பொன்விழா நடத்தினார். இப்போதைய முதல்வர் ஸ்டாலின் 1921ஆம் ஆண்டில் இருந்து கணக்கிட்டு சட்டமன்றத்திற்கு நூற்றாண்டு விழா நடத்துகிறார். மக்களை முட்டாளாக்கும் முயற்சியோ, வரலாற்றை திசை திருப்பும் முயற்சியோ ஏற்று கொள்ள முடியாத விஷயம் என ஜெயக்குமார் பதிலளித்தார்.
ஜிஎஸ்டி நிலுவைத் தொகை வழங்காத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவீர்களா என்ற கேள்விக்கு, ஜிஎஸ்டி அமைப்பின் உறுப்பினராக இருந்தபோது தீப்பெட்டி, பட்டாசு, வெட்கிரைண்டர் உள்ளிட்ட 37 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைத்ததாக கூறினார்.
கோவை குனியமுத்தூரில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,
திமுக ஆட்சி அமைந்ததும் உடனடியாக முதல் கையெழுத்தாக நீட் தேர்வை ரத்து செய்வோம் என இப்போதுள்ள முதல்வர் உள்ளிட்ட திமுகவினர் கூறினார்கள் அதனைநம்பி மக்கள் வாக்களித்தார்கள். பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம், குடும்பத் தலைவிகளுக்கு மாத உதவித் தொகை தருவோம் என்ற வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.
திமுக அரசு வந்தபின்னால் கொரோனா உயிரிழப்புகளை குறைத்து காட்டுகின்றனர். கோவை மாவட்டத்தில் 10 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். கோவையில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை 6 ஆண்டுகளில் கொடுத்து இருக்கிறோம். கோவை மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சித் திட்டங்களை எல்லாம் இந்த அரசு முழுமையாக நடத்தி முடிக்க வேண்டும்.
மாநகராட்சி மற்று ஊரக சாலைகளுக்காக விடப்பட்ட ஒப்பந்தங்களை திமுக அரசு ரத்து செய்துள்ளனர். பழுதடைந்த சாலைகளை சரி செய்ய ஒப்பந்தம் ஏற்படுத்திய நிலையில் அதனை ரத்து செய்துள்ளனர் திமுகவினர்.
காவல்துறை நடுநிலைமை இல்லாமல் திமுக அரசின் உத்தரவின்பேரில் அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்துவருகின்றனர். பல்வேறு வாக்குறுதிகளை சொல்லி ஆட்சிக்கு வந்த திமுகவினரால் அதனை செயல்படுத்த முடியாததால் திசைத்திருப்பவே அதிமுக அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்கின்றனர்.
தமிழ்நாட்டிற்கு அதிக தடுப்பூசிகளை கொடுக்க வேண்டும், கோதாவரி-காவிரி இணைப்புத்திட்டங்கள் குறித்து பிரதமரை சந்தித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் சந்தித்து வலியுறுத்தினோம். மக்களுக்கான திட்டங்களை திமுக அரசு செய்யவில்லை என்றாலும் அதிமுக எந்தநேரத்திலும் மத்தியில் அழுத்தம் கொடுத்து திட்டங்களை பெற்றுத்தருவோம்.