கோயில் இடத்தை மீட்க வந்த அதிகாரிகளுடன் சமரசம் பேசிய திமுக எம்.பி - வீட்டை இடித்து தள்ளி பதாகை வைத்த அதிகாரிகள்
சமரச பேச்சுவார்த்தையை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளாததால் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் அங்கிருந்து திரும்பி சென்றார்
மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் இடத்தை நேற்று 7 மணிநேர பேச்சுவார்த்தைக்குப்பின் அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டு கையகப்படுத்தினர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின்கீழ் மன்மதீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலின் பின்புறம் உள்ள மணவெளி தெருவில் கோயிலுக்கு சொந்தமான 3 கோடி ரூபாய் மதிப்பிலான 6,600 சதுர அடி பரப்பளவில் வீட்டுடன் கூடிய இடம் உள்ளது.
சம்பந்தம், ராமையா ஆகியோர் தங்கள் வசமிருந்த அந்த இடத்தை 10 ஆண்டுகளுக்கு முன் தியாகராஜன் என்பவருக்கு விற்பனை செய்துள்ளனர். ஆனால், பகுதி பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. இந்த சூழலில் கமர்ஷியல் கட்டணத்தில் உள்ள அந்த இடத்திற்கு 14 லட்சம் ரூபாய் வாடகை செலுத்தாததால் வாடகை செலுத்த கூறி கடிதங்களை சம்பந்தம், ராமையா ஆகிய இருவரும் இந்து சமய அறநிலையத்துறை துறை அனுப்பியுள்ளது. ஆனால் அந்த கடிதம் தொடர்பாக எவ்வித பதிலும் அளிக்காமலும், இடத்தை வாங்கி தியாகராஜனும் தகவல் தெரிவிக்காததால் அவரும் இடத்திற்கான வாடகை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த இடத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்துராமன், அறநிலையத்துறை வட்டாட்சியர் விஜயராகவன், செயல் அலுவலர் நிர்மலாதேவி ஆகியோர் முன்னிலையில் அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை துவங்கினர். இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது அங்குவந்த மயிலாடுதுறை திமுக பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை தடுத்து நிறுத்தி, வீட்டில் குடியிருப்பவர்களுக்கு கமர்ஷியல் கட்டணம் வசூலிப்பதாகவும், அதிகாரிகளின் தவறான நடவடிக்கையால் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்று கூறி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளாததால் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் அங்கிருந்து திரும்பி சென்றார்.
இதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற அதிகாரிகளை கோயில் பின்பக்க கதவுகளை மூடி அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். இதனால், குத்தாலம் காவல் ஆய்வாளர் வள்ளி தலைமையில் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். பின்னர், குத்தாலம் வட்டாட்சியர் பிரான்சுவா நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஆக்ரமிப்பு இடம் மீட்கப்பட்டது.
தொடர்ந்து, ஆக்ரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் இருந்த வீட்டினை முழுமையாக இடித்தபின்னர், அங்கு அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என்ற பதாகையை வைத்து கம்பிவேலி வைத்து அடைத்தனர். அந்த இடத்தில் அத்துமீறி நுழையும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்துராமன் எச்சரித்துள்ளார். சுமார் 6 மணி நேர நடைபெற்ற இந்த போராட்டம் குத்தாலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.