EPS On Stalin: ”தமிழ்நாட்டை சிந்தெடிக் போதைப்பொருட்களின் புகலிடமாக மாற்றிய திமுக” - எடப்பாடி பழனிசாமி சாடல்
EPS On Stalin: போதைப்பொருள் தடுப்பில் விழிப்புடனும், துரிதமாகவும் செயல்படுமாறு, தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
EPS On Stalin: தமிழ்நாட்டை சிந்தெடிக் போதைப்பொருட்களின் புகலிடமாக திமுக மாற்றியுள்ளதாக, எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு:
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “சென்னை விமான நிலையத்தில் 22 கோடி ரூபாய் மதிப்பிலான கொக்கைன் மற்றும் எம்டிஎம்ஏ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. விடியா திமுக ஆட்சியில் அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கம் குறித்து தொடர்ச்சியாக நான் எச்சரித்து வந்தும், இந்த விடியா அரசு அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, திமுக அயலக அணி நிர்வாகியாக இருந்த ஒருவர், சர்வதேச போதைப்பொருள் மாபியாவாக இருந்த செய்தியே வந்து சேர்ந்தது.
”சிந்தெடிக் போதப்பொருள்”
தற்போது, சிந்தெடிக் போதைப்பொருட்களை கடத்துபவர்கள் எவ்வித அச்சமுமின்றி தமிழ்நாட்டை போதை பொருள் மையமாக மாற்றி இருப்பதற்கு இந்த விடியா அரசே காரணியாக உள்ளது , சிந்தெடிக் போதைப்பொருட்களின் புகலிடமாக தமிழ்நாட்டை மாற்றிய விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதுடன், இனியாவது போதைப்பொருள் தடுப்பில் விழிப்புடன் துரிதமாக செயல்படுமாறு இந்த விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்”
என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை முதலமைச்சர் ஸ்டாலினின் டிவிட்டர் கணக்கிற்கும் டேக் செய்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் 22 கோடி ரூபாய் மதிப்பிலான கொக்கைன் மற்றும் எம்டிஎம்ஏ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) May 17, 2024
விடியா திமுக ஆட்சியில் அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கம் குறித்து தொடர்ச்சியாக நான் எச்சரித்து வந்தும், இந்த விடியா அரசு…
போதைப்பொருள் பறிமுதல்:
நெதர்லாந்து நாட்டிலிருந்து சரக்கு விமானம் மூலம் சென்னை வந்தடைந்த பார்சல் ஒன்றை, என்.சி.பி அதிகாரிகள் கைப்பற்றி சோதனை நடத்தினர். அதிலிருந்து 1.4 கிலோ போதை மாத்திரைகளை கைப்பற்றினார். தொடர்ந்து அந்தப் பார்சலில் இருந்த முகவரியின் படி, புதுச்சேரி மற்றும் பெங்களூரில் இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதோடு பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்த 15 கிராம் கொக்கைன் கைப்பற்றப்பட்டது.
இதே போல் சில நாட்களுக்கு முன்பு, மும்பையிலிருந்து சென்னைக்கு வந்த நைஜீரிய நாட்டு இளம்பெண் உட்பட இரண்டு பேரை பிடித்து என்.சி.பி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 1.8 கிலோ கொக்கைன் ஆடையில் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த ஒருவார காலத்தில் மட்டும் சென்னை விமான நிலையத்தில், மொத்தம் ரூ.22 கோடி மதிப்புடைய கொக்கைன் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.