DMK Neet Protest: ”நீட் வேண்டாம்” - திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் - சென்னையில் உதயநிதி பங்கேற்பு..
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாட்டில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.
நீட் தேர்வுக்கு எதிரான இந்த உண்ணாவிரத போராட்டம் மதுரையில் மட்டும் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உண்ணாவிரத போராட்டம்:
இதுதொடர்பான திமுக அறிக்கையில் “தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து, அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக உருவெடுத்துள்ள 'நீட்' தேர்வைத் திணிக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, ஆளுநரை கண்டித்தும், 'நீட்' தேர்வை ரத்து செய்யக் கோரியும் தி.மு.க.வின் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில், தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று மாபெரும் உண்ணாவிரத அறப்போர் நடைபெற உள்ளது” என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதேநேரம், மதுரையில் மட்டும் இந்த உண்ணாவிரத போராட்டம் வரும் 23ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெற உள்ள இந்த உண்ணாவிரத போராட்டம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாணவ, மாணவிகள், பெற்றோர், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்பாடுகள் தீவிரம்:
'நீட்' தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையில் தன்னார்வலர்களும், பொதுமக்களும் தங்களின் கருத்துகளை இந்த போராட்டத்தின் போது எடுத்துரைப்பார்கள். அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளை உள்ளிட்ட திமுகவின் நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், அணிகளின் நிர்வாகிகள் என அனைவரும் கலந்துகொள்கிறார்கள். உண்ணாவிரத அறப்போராட்டப் பணிகளை இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணிகளின் மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஒருங்கிணைக்கிறார்கள்.
அமைச்சர்கள், எம்.பிக்கள் பங்கேற்பு:
சென்னையில் வள்ளுவர்கோட்டம் அருகே நடைபெறும் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்கிறார். இந்த அறப்போராட்டத்தை திமுக பொதுச்செயலாளரான அமைச்சர் துரைமுருகன் தொடங்கிவைக்கிறார். இதில் கட்சியின் மாணவர் அணி செயலாளர் எழிலரசன், மருத்துவர் அணி தலைவர் டாக்டர் கனிமொழி, செயலாளர் டாக்டர் எழிலன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொள்கின்றனர். தூத்துக்குடியில் கனிமொழியும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசனும் தொடங்கி வைக்கின்றனர். காஞ்சீபுரம் மாவட்டம் பெரியார் தூண் காந்தி சாலையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்ட செயலாளர் சுந்தர் பங்கேற்கிறார். திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி அருகே நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தை தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி முடித்து வைக்கிறார். இதேபோன்று, திருச்சி ரயில் நிலையம், திருவண்ணாமலை தாலுகா அலுவலகம், திருவாரூர் ரயில் நிலையம், தூத்துக்குடி சிதம்பரம் நகர் பஸ் நிறுத்தம், ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிறுத்தம், திருப்பூர் ரயில் நிலையம், தஞ்சை தபால் நிலையம், ராமநாதபுரம் அரண்மனை, சிவகங்கை அரண்மனை வாசல், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் என பல்வேறு மாவட்டங்களின் தலைநகரங்களிலும் நீர் தேர்வை ரத்து செய்யக்கோரி இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.