DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
சட்டசபையில் தவெக எம்.எல்.ஏ.க்கள் நடந்துக் கொள்வதை பற்றிய கேள்விக்கு, நான் ஒன்னும் இதற்கு பண்ண முடியாது. சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஓரளவு சமாளித்து கொண்டு போகிறார் என துரை முருகன் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வருபவர்கள் எங்களுக்குப் பின்னால் யாரும் வர மாட்டார்கள் என்று சொல்வார்கள் என முன்னால் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூரில் இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக இனி சட்டசபைக்கே வராது. தேர்தலில் வெற்றி பெறவே முடியாது என தவெக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தெரிவித்த கருத்து பற்றி திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகனிடம் கேள்வியெழுக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வருபவர்கள் எங்களுக்குப் பின்னால் யாரும் வர மாட்டார்கள் என சொல்வார்கள். அப்படியாக எம்ஜிஆர் சொன்னபோதும், ஜெயலலிதா சொன்னபோதும் வெற்றி பெற்றுள்ளோம். நாங்களும் சொன்னபோது எங்களையும் வென்று உள்ளார்கள். அதையெல்லாம் சட்டசபையில் உட்கார்ந்திருக்கும்போது பெருமையாக பேசிக் கொள்வது தான். இது அரசியல் ஞானத்தின்படி சொல்வது கிடையாது என தெரிவித்தார்.
தவெக ஆட்சிக்கு வந்த பின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு நிதி இல்லை என சொன்ன விஜய், எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்குவோம் என சொல்லியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு, அந்த நியூஸைப் பார்த்தவுடன் நான் கூட பரவாயில்லை என நினைத்தேன். எனினும் ஊடகங்களில் வெளியான செய்தியை பார்த்தபோது கார் இல்லாதவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளனர். கேள்வி கேட்டவருக்கே 3 கார் உள்ளது. திமுகவைப் பொறுத்தவரை கார் இருக்கிறதோ, இல்லையோ அது தேவையில்லை என சொல்லி விட்டோம்.
எம்.எல்.ஏ.க்களின் உதவியாளர்களுக்கு கொடுக்கும் ரூ.25 ஆயிரம் சம்பளம் போல தூய்மைப் பணியாளர்களுக்கு அதே சம்பளம் வழங்கலாம் என கோரிக்கை முன்வைக்கப்படுகிறதே என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, இது நியாயமான கோரிக்கை தான். இருந்தாலும் எம்.எல்.ஏ., கார் உள்ளிட்ட சலுகைகள் அறிவித்ததை விஜய் செய்திருக்கக்கூடாது. ஏனென்றால் நிதி இல்லை, கஜானாவை காலியாக வைத்து விட்டுச் சென்று விட்டார்கள் என்று தானே சொன்னார்கள். அப்படியிருக்கும்போது எப்படி கார் கொடுக்க முடியும். தூய்மைப் பணியாளர்கள் மாதக்கணக்கில் போராட்டம், உண்ணாவிரதம் நடத்துகிறார்கள். அவர்கள் கேட்டதில் நியாயம் உள்ளது என கூறினார்.
சட்டசபையில் தவெக எம்.எல்.ஏ.க்கள் நடந்துக் கொள்வதை பற்றிய கேள்விக்கு, நான் ஒன்னும் இதற்கு பண்ண முடியாது. சபாநாயகர் நீண்ட நாள் அங்கு இருந்த அனுபவம் வாய்ந்தவர். ஜேசிடி பிரபாகர் ஓரளவு சமாளித்து கொண்டு போகிறார். தவெக எம்.எல்.ஏ.,க்களின் கூத்தை நடக்காமல் அவர் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். எம்.எல்.ஏ.க்களுக்கு மரபு, சட்டம் என எதுவும் தெரியவில்லை. உள்ளே செல்லும்போது அந்த விதிகள் தொடர்பான புத்தகம் கொடுப்பார்கள். அதை கொடுத்தார்களா இல்லையா என தெரியவில்லை என்று துரை முருகன் பதிலளித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















