ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கல்வி உதவித்தொகை: ஏஐசிடிஇயின் ஸ்வநாத் திட்டம்
திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் மொத்தம் 2,000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

சென்னை: தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களின் உயர்கல்விக்கு பொருளாதாரம் தடையாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (AICTE) சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கியமான கல்வி உதவித்தொகை திட்டம் ‘ஸ்வநாத் கல்வி உதவித்தொகை திட்டம்’ ஆகும்.
குறிப்பாக பெற்றோரை இழந்தவர்கள், கோவிட்-19 காரணமாக பெற்றோரை இழந்தவர்கள் மற்றும் பணியின்போது உயிரிழந்த பாதுகாப்புப் படையினரின் வாரிசுகளுக்கு இந்த திட்டம் கல்வியில் தொடர்ந்து பயணிக்க உதவுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் மொத்தம் 2,000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் 1,000 இடங்கள் பட்டப்படிப்பு மாணவர்களுக்கும், 1,000 இடங்கள் பட்டயப் படிப்பு மாணவர்களுக்கும் ஒதுக்கப்படுகின்றன.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தாய், தந்தை இருவரையும் இழந்த ஆதரவற்ற மாணவர்கள், கோவிட்-19 காரணமாக பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரையும் இழந்தவர்கள், ஆயுதப்படைகள் மற்றும் மத்திய துணை ராணுவப் படைகளில் வீரமரணம் அடைந்தவர்களின் வாரிசுகள் ஆகியோர் இந்த உதவித்தொகைக்கு தகுதி பெறலாம்.
மேலும், உயிருக்கு ஆபத்தான தீவிர நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோர், விபத்தில் உயிரிழந்த பெற்றோர் அல்லது 80 சதவீதத்துக்கும் அதிகமாக ஊனமுற்ற பெற்றோரின் பிள்ளைகளும் தகுதியுடையவர்களாக உள்ளனர்.
விண்ணப்பதாரர்கள் AICTE அங்கீகாரம் பெற்ற கல்லூரி, நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பப் பிரிவில் பட்டப்படிப்பு அல்லது பட்டயப் படிப்பு படித்து வர வேண்டும். பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரையிலும், பட்டயப் படிப்பில் முதலாம் ஆண்டு முதல் மூன்றாம் ஆண்டு வரையிலும் பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாணவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், மத்திய அரசு, மாநில அரசு அல்லது AICTE வழங்கும் வேறு கல்வி உதவித்தொகையை ஏற்கனவே பெறுபவராக இருக்கக் கூடாது. முதுகலைப் படிப்பு பயிலும் மாணவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.
படிப்பு முடியும் வரை உதவித்தொகை!
பட்டப்படிப்பு மாணவர்களுக்கு அதிகபட்சம் 4 ஆண்டுகளும், பட்டயப் படிப்பு மாணவர்களுக்கு 3 ஆண்டுகளும் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். ஏற்கனவே இரண்டாம், மூன்றாம் அல்லது நான்காம் ஆண்டில் படிக்கும் மாணவர்கள், மீதமுள்ள படிப்பு காலத்திற்கு மட்டும் உதவித்தொகை பெறுவார்கள்.
இந்தத் தொகை மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். கல்விக் கட்டணம், புத்தகங்கள், கணினி, எழுதுபொருட்கள், கல்வி உபகரணங்கள் மற்றும் மென்பொருள் போன்ற கல்வி சார்ந்த தேவைகளுக்கு இதைப் பயன்படுத்தலாம். விடுதி மற்றும் மருத்துவச் செலவுகளுக்கு பயன்படுத்த முடியாது.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த உதவித்தொகைக்கு மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். முதலில் மாணவர்கள் தங்களைப் பதிவு செய்து, பின்னர் உள்நுழைந்து விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்படும் கல்வி மற்றும் குடும்ப விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
பெற்றோரை இழந்ததற்கான சான்றிதழ், போனஃபைட் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விவரங்கள், புகைப்படம் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை பிரிவுக்கு ஏற்ப பதிவேற்ற வேண்டும்.
விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, பட்டப்படிப்பு மாணவர்கள் 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையிலும், பட்டயப் படிப்பு மாணவர்கள் 10-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவர்.
ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டும்!
உதவித்தொகையை தொடர்ந்து பெற விரும்பும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்களது மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பித்து விண்ணப்பத்தை Renewal செய்ய வேண்டும்.
இழந்ததை நினைத்து கல்வியை இழக்காமல்... உதவிக்கரம் நீட்டும் திட்டம்! பொருளாதாரச் சுமையால் தொழில்நுட்பக் கல்வியை பாதியில் நிறுத்தும் சூழலை தவிர்த்து, தகுதியுள்ள மாணவர்கள் உயர்கல்வியை தொடர்வதற்கு AICTE-யின் ஸ்வநாத் உதவித்தொகை முக்கிய ஆதரவாக அமைகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்





















