(Source: ECI/ABP News/ABP Majha)
Case Against EPS: எடப்பாடி பழனிசாமி மீது குற்றவியல் வழக்கு.. பின்னணி என்ன?
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு பதிவு செய்துள்ளார்.
உண்மைக்கு புறம்பான தகவல்களை தனக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக கூறி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது திமுக மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் குற்றவியல் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவை சேர்ந்த மத்திய சென்னை வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார். அப்போது தன் மீது உண்மைக்கு புறம்பாக அவதூறாக பேசி இருப்பதாக கூறி எடப்பாடி பழனிச்சாமி மீது மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார்.
எழும்பூர் நீதிமன்றம் வழக்கு பதிவு செய்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த தயாநிதிமாறன், ”முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னுக்கு பின் புறம்பாக நான் தொகுதி மேம்பாட்டு நிதியை 75 சதவீதம் பயன்படுத்தவில்லை என்று பொய்யான தகவல் என்று தெரிந்தே தன் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். எனவே, இதுகுறித்து 24 மணிநேரத்தில் அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்றும் தெரிவித்திருந்தேன். ஆனால் 24 மணிநேரமாகியும் அவர் மன்னிப்பு கேட்காததால் அவர் மீது கிரிமினல் அவதூறு வழக்கினை பதிவு செய்திருக்கிறேன். இந்த வழக்கு அடுத்த மாதம் 14 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ”தொகுதி நிதியில் ரூபாய் 17 கோடியில் 17 லட்சம் ரூபாய் தான் மீதம் இருப்பதாகவும், தொகுதி நிதியை மத்திய சென்னைக்காக செலவழித்துள்ளேன். எடப்பாடி பழனிச்சாமி தோல்வி விரக்தியில் பேசி வருகிறார். அவர் பேசுவது அவருக்கே தெரிகிறதா என்று தெரியவில்லை. ஏதோ வந்தோம் பேசினோம் என்று திமுகவினரை தாக்கினோம் என்று பேசி இருக்கிறார். உண்மை என்னவென்று மக்களுக்கு தெரியும். என் தொகுதிக்கு சிறப்பான முறையில் பணியாற்றி இருக்கிறேன்.
செய்தி வெளியிட்ட ஆங்கில நாளேடு ஆர்.டி.ஐ மூலமாக அந்த செய்தியை பெற்றதாகவும் இதற்கு மறுப்பும் தெரிவித்து இருக்கிறது. இதே போலவே கச்சத்தீவு விவகாரத்தில் ஆர்டிஐயில் வந்த தவறான செய்தியை அண்ணாமலையும் வெளியிட்டார். ஆர்.டி.ஐ முறை பாஜக ஆட்சியில் எப்படி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிகிறது” என தெரிவித்துள்ளார்.