Vijayakanth: ‘விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை; இன்னும் 14 நாட்கள் தேவை’ .. மருத்துவமனை அறிக்கையால் பரபரப்பு
DMDK Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேமுதிக தலைவரான விஜயகாந்த், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். அதனால் அவர் பெரிய அளவில் வெளியில் தலைக்காட்டுவது இல்லை. அவ்வப்போது தேமுதிக அலுவலகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று தொண்டர்களை சந்தித்து வருகிறார். கம்பீரமான மனிதராக வலம் வந்த விஜயகாந்தின் தற்போதைய நிலையில் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
இப்படியான நிலையில், “ தீபாவளி பண்டிகை அன்று விஜயகாந்த் தன் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியானது, இதனையடுத்து இருமல், சளி மற்றும் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டு கடந்த நவம்பர் 18 ஆம் தேதி விஜயகாந்த் சென்னை போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் தேமுதிக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில், “விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருக்கிறார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நவம்பர் 23 ஆம் தேதி மியாட் மருத்துவமனை விஜயகாந்த் உடல்நலம் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், “விஜயகாந்த் காய்ச்சல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் 18 நவம்பர் 2023 அன்று அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு தருகிறார். அவர் உடல் நிலை சீராக உள்ளது. அனைத்து உடல் செயல்பாடுகள் நிலையாக உள்ளது. இன்னும் சில நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு அவர் வீடு திரும்பி தனது வழக்கமான நடவடிக்கைகளைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டது.
Wishing Captain #Vijayakanth a speedy recovery. pic.twitter.com/mnyM7CiryK
— Vijith Amirthalingam (@Vijith_offl) November 29, 2023
இதற்கு நடுவில் விஜயகாந்த் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை நடைபெற்று வருவதாக பரவிய தகவலை, தேமுதிக தலைமைக்கழகம் திட்டவட்டமாக மறுத்தது. இந்நிலையில் விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை சீராக இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரு. விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், தேமுதிக தொண்டர்கள் சோகமடைந்துள்ளனர்.