Air Pollution: காற்றின் தரம் எப்படி கணக்கிடப்படுகிறது? பச்சை முதல் பழுப்பு வரை உணர்த்தும் ஆபத்துகள்!
காற்றின் தரத்தின் குறியீடு எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்றும், அதன் பாதிப்பு என்னென்ன? என்பதையும் கீழே விரிவாக காணலாம்.
மனிதர்கள் ஆரோக்கியமான வாழ்வை உணவு, உடல்நலம் எந்தளவு முக்கியமோ அதைவிட முக்கியம் காற்று ஆகும். சுத்தமற்ற காற்று கிடைக்காவிட்டால் மக்கள் கடும் உடல்நலக்குறைவை சந்திக்க நேரிடும்.
காற்றின் தரம்
காற்றின் ஒவ்வொரு அளவு மாசுபாட்டிற்கும் AQI மதிப்பு அளிக்கப்படுகிறது. 100 அல்லது அதற்கும் குறைவான AQI மதிப்புகள் பொதுவாக திருப்திகரமாக கருதப்படுகிறது. AQI மதிப்புகள் 100 க்கு மேல் இருக்கும் போது, காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாக இருக்கும்.
AQI ஆறு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகையும் வெவ்வேறு அளவிலான சுகாதார அக்கறைக்கு ஒத்திருக்கிறது. ஒவ்வொரு வகைக்கும் ஒரு குறிப்பிட்ட நிறம் உள்ளது. மக்கள் சுவாசிக்கும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை அடைகிறதா? என்பதை விரைவாகத் தீர்மானிக்க இது உதவுகிறது.
தீபாவளியால் மோசமான நிலைக்குச் சென்ற காற்று மாசுபாடு:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று நாடு முழுவதும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் பொதுமக்கள் புத்தாடை அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும் தீபாவளியை கொண்டாடினர். தலைநகர் சென்னையில் ஏற்கனவே வாகனப் போக்குவரத்து, தொழிற்சாலை கழிவுகள் என பல்வேறு காரணங்களால் காற்றின் தரம் சுகாதாரமற்ற நிலையிலே உள்ளது. இந்த நிலையில், சென்னையில் நேற்று காற்றின் தரமானது மிகவும் மோசமான நிலைக்குச் சென்றது.
காற்றின் தரம் எந்தளவில் இருந்து என்ன அர்த்தம் என்பதை கீழே காணலாம்.
காற்றின் தரத்தை பச்சை, மஞ்சள், ஆரஞ்ச், சிவப்பு, ஊதா, பழுப்பு ( மெரூன்) நிறங்களில் பிரிக்கின்றனர்.
பச்சை:
காற்றின் தரமானது பச்சை நிறத்தில் இருப்பது மிகவும் ஆரோக்கியமானது ஆகும். காற்றின் தரக்குறியீடு 0 முதல் 50 வரை இருந்தால் காற்றானது ஆரோக்கியமான சூழலில், திருப்திகரமாக இருப்பதாக அர்த்தம். காற்றின் சுத்தத்தில் எந்த வித ஆபத்தும் இல்லை என்று கருதலாம்.
மஞ்சள்:
காற்றின் தரமானது 51 முதல் 100 வரை குறியீடு அளவில் இருக்கும்போது காற்று தரம் ஏற்கும் அளவில் உள்ளது என்று அர்த்தம். சுவாசக் கோளாறு உள்ள சிலருக்கு வேண்டுமானால் சிரமம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மிதமான பாதிப்பு என்றும் மஞ்சள் நிறக்குறியீட்டை புரிந்து கொள்ளலாம்.
ஆரஞ்ச்:
காற்றின் தரக்குறியீடு 101 முதல் 150 வரை இருப்பின் சிலருக்கு ஆரோக்கியமற்றது ஆகும். உடல்நலக்குறைவு உள்ளவர்கள் இதன் காரணமாக பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் ஆகும்.
சிவப்பு:
காற்றின் தரம் சிவப்பு நிறத்தின் கீழ் வந்தால் அது ஆரோக்கியமற்றது ஆகும். 151 முதல் 200 வரையிலான குறியீடு எண் வந்தால் பொதுமக்களில் சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்படலாம். சுவாசப் பிரச்சினை உள்ளிட்ட உடல்நலக்குறைவு உள்ள மக்கள் கடும் சிரமத்தைச் சந்திக்க நேரிடும் வாய்ப்பு உள்ளது.
ஊதா:
காற்று மாசு அடைந்து 201 முதல் 300க்குள் காற்றின் தரக்குறியீடு சென்றால் மிகவும் ஆரோக்கியமற்றது என்று அர்த்தம். அனைவருக்கும் உடல்நல பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
பழுப்பு நிறம்:
அடர் சிவப்பு நிறமான பழுப்பு நிறம் ( மெரூன்) நிறத்தின் கீழ் 300க்கும் மேல் செல்லும் காற்றின் தரக்குறியீடு குறிப்பிடப்படுகிறது. இந்த நிலைக்கு காற்றின் தரம் சென்று விட்டால் அபாயம் என்று அர்த்தம். ஆரோக்கியத்திற்கு ஆபத்தான சூழல் ஏற்படும் வாய்ப்புகள் மிக மிக அதிகம் ஆகும். இதனால் அனைவரும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
டெல்லியில் காற்றின் மாசு மிக மோசமான நிலையைச் சென்றடைந்த காரணத்தாலே தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடிக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் நேற்று இரவு 10.01 மணிக்கு காற்றின் தரம் மிக மோசமான நிலைக்குச் சென்று காற்றின் தரக்குறியீடு 379-ஐ எட்டியதாக காற்றுத் தர குறியீடு தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.