புதுச்சேரியில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்... 44 பேர் டெங்கு காய்ச்சலால் பதிப்பு... அதிரடி நடவடிக்கையில் இறங்கிய சுகாதாரத்துறை
புதுச்சேரி மாநிலத்தில் டெங்கு காய்ச்சலில் 44 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதே போன்று சிக்கன்குனியா நோய் தொற்றில் பாதிக்கப்பட்டு 2 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை தகவல்
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் டெங்குவால் பாதிக்கப்பட்ட தருமாபுரி பகுதியை சேர்ந்த மீனா ரோஷினி (28). குருமாம்பேட் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி காயத்ரி (19) ஆகிய 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். டெங்குவால் கடந்த 2 நாட்களில் 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். புதுச்சேரியில் கடந்த 2 நாட்களில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் மேட்டுப்பாளையம், குரும்பாபேட் பகுதியில் மருத்துவ குழுவினர் சிறப்பு முகாம் நடத்தி வருகின்றனர். மேலும், யாருக்காவது காய்ச்சல் அல்லது டெங்கு அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வர வேண்டும் என்று சுகாதாரக் குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர். அரசு மருத்துவ மனைகளில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான படுக்கை வசதிகள் மற்றும் மருந்துகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது:
புதுச்சேரியில் டெங்குவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முகாம் அமைத்து தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபட்ட பிறகு இயல்பு நிலை திரும்பி விடும் என்ற பொய்யான தோற்றத்தை உருவாக்குவதாலும் காலதாமத சிகிச்சையாலும் உயிரிழப்பு ஏற்படுகிறது. காய்ச்சல் அறிகுறி ஏற்படுபவர்கள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். வீட்டையும் சுற்றுபுறத்தையும் மக்கள் சுத்தமாக வைக்க வேண்டும். கொசு உருவாகாத வகையில் தூய்மையை கடைபிடிக்க வேண்டும் என சுகாதார துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.