”விசிக காரங்க அதை பெருசு பண்ணியிருந்தா” : திருமாவளவன் ரீ ட்வீட் செய்த பதிவு என்ன சொல்கிறது?
சனநாயக சக்திகள் உண்மைகளை உரக்க சொல்வதால் தான் சனநாயகம் நம்பிக்கை பெறுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியான 'ஜெய்பீம்' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் விமர்சனங்கள் ரீதியாக ஒரு சில அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது.
அதிலும், குறிப்பாக பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்கள் மத்தியில் வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் வன்னியர் சமுதாயம் எந்த அளவுக்கு திட்டமிட்டு இழிவுபடுத்தப்பட்டிருக்கிறது என்பது குறித்து ஆயிரக்கணக்கான மக்களும், இளைஞர்களும் என்னிடம் தெரிவித்து வருகின்றனர் என்று பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து நடிகர் சூர்யாவிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தார்.
இதற்கு அறிக்கை மூலம் பதிலளித்த நடிகர் சூர்யா, மதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு, வணக்கம். தங்கள் கடிதத்தை சமூக ஊடகங்களின் வாயிலாகப் படித்தேன். என் மீதும் எனது குடும்பத்தார் மீதும் தாங்கள் காட்டியிருக்கும் அன்பிற்கு நன்றி. நீதிநாயகம் சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய ஒரு வழக்கில், 'அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது' என்பதே ஜெய்பீம் படத்தின் மையக்கரு. பழங்குடியின மக்கள் நடைமுறையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளையும் படத்தில் பேச முயற்சித்திருக்கிறோம்.
படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் எந்தவொரு சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை' என்கிற தங்களின் கருத்தை முழுவதுமாய் நான் ஏற்கிறேன். அதேபோல, 'படைப்பு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும்' என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
நடிகர் சூர்யாவின் இந்த அறிக்கைக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி அச்சு அசலாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போன்று கதாபாத்திரத்தை உருவாக்கி கருத்து ரீதியாக தாக்கினர். ஆனால், இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத திருமாவளவன், தனது கட்சியினரை கடந்து செல்ல கோரிக்கை வைத்தார். இது தான் உண்மையான தலைமைப்பண்பு.
கீழேயுள்ள ட்வீட்டை செய்துள்ள தம்பி @vijay_writes யாரென்று தெரியவில்லை. எனினும் இவருடைய நேர்மைத் திறத்துக்கு எனது மனமார்ந்த நன்றி. இவரைப் போன்ற சனநாயக சக்திகள் உண்மைகளைச் சொல்ல வேண்டிய நேரத்தில் உரத்துச் சொல்லுவதுதான் சனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது. pic.twitter.com/W3mrldx5VF
— Thol. Thirumavalavan (@thirumaofficial) November 13, 2021
அன்புமணி ராமதாஸ் திருமாவளவன் போல் இல்லாமல், தனது சுய அரசியல் லாபத்திற்காக வன்னிய இளைஞர்களை தூண்டுவதாக @vijay_writes என்ற நபர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு மறு ட்வீட் செய்த திருமாவளவன், சனநாயக சக்திகள் உண்மைகளை உரக்க சொல்வதால் தான் சனநாயகம் நம்பிக்கை பெறுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள அந்த பதிவில், ”கீழேயுள்ள ட்வீட்டை செய்துள்ள தம்பி @vijay_writes யாரென்று தெரியவில்லை. எனினும் இவருடைய நேர்மைத் திறத்துக்கு எனது மனமார்ந்த நன்றி. இவரைப் போன்ற சனநாயக சக்திகள் உண்மைகளைச் சொல்ல வேண்டிய நேரத்தில் உரத்துச் சொல்லுவதுதான் சனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.