DA Hike TN Govt: அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 சதவீதமாக உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 31 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
“ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள்/ குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1.1.2022ம் ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என கடந்த 7.9.2021ம் அன்று சட்டமன்ற பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 14 சதவீதம் உயர்த்தி, 1.1.2022ம் ஆண்டு முதல் 17 சதவீததத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்கிட இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
இந்த அகவிலைப்படி உயர்வு காரணமாக அரசுக்கு ஆண்டொன்றிற்கு சுமார் ரூபாய் 8 ஆயிரத்து 724 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். மேலும், பொங்கல் பரிசாக சி மற்றும் டி பிரிவுப் பணியாளர்களுக்கு ரூபாய் 3 ஆயிரமும், ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாய் வழங்கிடவும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசாக 1000 ரூபாயும், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சிறப்பு ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாயும் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இதன் காரணமாக, அரசுக்கு ரூபாய் 169.56 கோடி ரூபாய் தோராயமாக செலவினம் ஏற்படும்.
தமிழ்நாடு அரசுக்கு நிதிச்சுமை உள்ள இந்த சூழ்நிலையிலும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி, அகவிலைப்படியினை 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்கிடவும், சி மற்றும் டி பிரிவுப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிடவும் முதலைமைச்சர் ஆணையிட்டுள்ளார்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசு ஊழியர்கள் சங்கங்களும், அமைப்புகளும் நன்றி தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க : NEET Ban | நீட்: குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்கும்வரை உண்ணாவிரதம் : பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அறிவிப்பு
மேலும் படிக்க : Tamil News: ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் மதுரை... பெண்கள் வடம்பிடித்த தேர் - தென்மாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்