‛இது தான் எங்க வீடு... இப்படி தான் எங்க வாழ்வு’ இருளில் இருளர் குடும்பங்கள்!
எங்களுக்கும் வாழ ஆசைதான்... அடிப்படை வசதியில்லாமல் தார்பாய்க்குள் வாழ்ந்து வரும் இருளர் இன மக்களின் கவலை பக்கங்கள்.
விழுப்புரம் மாவட்டம் கரசனூர் இருளர் குடியிருப்பு பகுதியில், கடந்தாண்டில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த குடிசைகள் அனைத்தும் எதிர்பாராவிதமாக எரிந்தன. எரிந்துப்போன தங்களின் குடிசைப்பகுதிக்கு மனைப்பட்டா வழங்குமாறு அங்கு வசித்த பழங்குடி இருளர் இன மக்கள், பல முறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் அலட்சியப்படுத்துவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அரசு தரப்பில் இது தொடர்பாக அவர்களுக்கு எவ்வித நடவடிக்கையும் ஏற்படுத்திக்கொடுக்கப்படாமல் இருந்தாகவும், மாவட்ட நிர்வாகமும் அரசு அதிகாரிகளும் தங்களை அலைக்கழிப்பதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் குறைந்த அளவு எண்ணிக்கையிலேயே பழங்குடி இருளர்கள் வசித்து வருகின்றனர். பத்து கிராமங்களுக்கு ஒரு கிராமம் என்ற விகிதத்தில், 10 - 25 குடும்பம் வரை ஒவ்வொரு இடத்திலும் வசித்து வருகின்றனர். அந்த வகையில், பெரும்பாலானோர் இருளர்கள் நீர்பிடிப்பு பகுதிகளில் தான் வாழ்ந்து வருகின்றனர். வயல் வெளிகளில் எலிகளை பிடிப்பது, காடுகளில் விறகு வெட்டுவது என இருந்த இவர்கள் தற்போது அப்பகுதி விவசாய நிலங்களில் கூலிகளாக வேலை செய்து வருகின்றனர்.
அப்படி விவசாய நிலங்களில் கூலி வேலை செய்து வந்த 20 குடும்பங்கள், விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்திற்கு உட்பட்ட கரசனூர் கிராமத்தில் சுமார் 20 குடிசைகளில் வாழ்ந்து வந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வீட்டிற்குள் சமையல் செய்யும்போது ஏற்பட்ட தீ காரணமாக, அங்கிருந்த 15 குடிசைகளும் எரிந்து சாம்பலாகின. அந்த விபத்தில் பொருட்கள் எல்லாம் தீக்கு இறையான நிலையில் தங்குவதற்கு இடம் இல்லாமல் தவித்தனர். அப்போது தற்காலிகமாக அங்கிருந்த பள்ளிக்கூடத்தில் அரசு சார்பில் சில நாட்கள் தங்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தாங்கள் தங்குவதற்கு நிரந்த வீடு வேண்டும் என்கிற கோரிக்கையை அவர்கள் பலமுறை வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அதிகாரிகளோ, அலட்சியத்துடன் கணக்கெடுக்கும் பணியோடு அவற்றை நிறுத்திவிட்டனர் என சொல்லப்படுகிறது.
இதனிடையே தொடர் போராட்டத்துக்குப் பின், வருவாய்த்தறையினர் அவர்களுக்கு அதே பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் ஒரு சென்ட்க்கும் குறைவான வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கியுள்ளார். ஆனால் அங்கு மக்கள் வாழ முடியாத அளவுக்கு கல்குவாரிகளால் தோண்டப்பட்ட அதிக அளவு ஆழம் கொண்ட தண்ணீர் குட்டைகள் இருந்துள்ளது. மிகவும் ஆபத்தான அந்தப் பகுதியில் குழந்தைகளோடு வசிப்பது மிகவும் சிரமமான ஒன்றாக இருக்குமென கூறி, தங்களுக்கு வேறு இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள் அவர்கள்.
அரசு ஒதுக்கிய அந்த ஒரு செண்ட் பகுதியில் தங்கினால் தங்கள் உயிருக்கும் தங்கள் குழந்தைகளின் உயிருக்கும் ஆபத்து எனக்கூறி, தற்போது அவர்கள் அனைவரும் தாங்கள் முன்பு குடியிருந்த பகுதியிலேயே எரிந்த வீடுகளுக்கு மத்தியில் தார்பாயல் கொட்டகை அமைத்து தங்கியுள்ளனர். மாவட்ட ஆட்சியர் தங்களின் கோரிக்கை மீது அக்கறை செலுத்தி, தங்களுக்கு மக்கள் வாழத்தகுந்த பாதுகாப்பான ஒரு இடத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இவர்களைப் போன்ற பழங்குடியின இருளர் மக்கள் அனைவருக்கும் இருக்கும் சவால்களில் முக்கியமானதாக இருக்கிறது சொந்தமான வீட்டு மனை பட்டா வாங்குவது. தங்கும் இடமே சிக்கலெனும் போது, கல்வி என்பது மிக மிக அசாத்தியமானதாக ஆகிவிடுகிறது. பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து, கரசனூர் பழங்குடி இருளர்களின் இந்த அடிப்படை தேவையை தீர்க்க, இனியாவது ஏதாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பலவகையில் கோரிக்கைகள் எழுத்துள்ளன.