பிபின் ராவத் மரணம் குறித்து வலைதளங்களில் அவதூறு - பாஜக அனுதாபியை கைது செய்த சைபர் க்ரைம் போலீஸ்
153A,505/1b, 504 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் விபத்து குறித்து சமூக வலைதளத்தில் தமிழக அரசு மீது களங்கம் ஏற்படுத்தும் விதமாக பதிவிட்ட புதுக்கடை பகுதியை சேர்ந்த 24 வயது பாஜக அனுதாபி வாலிபரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இரண்டு தினங்களுக்கு முன் குன்னூர் மலைப்பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக பலரும் பல தரப்பட்ட கருத்துகளை சமூக வலைதளங்கள் வாயிலாக பதிவு செய்து வந்தனர் இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் யாரும் எந்த கருத்தும் கூற வேண்டாம் என்றும் ஹெலிகாப்டர் விபத்து குறித்த முழு தகவல்கள் விசாரணையில் இருப்பதால் அது தொடர்பாக எந்த ஊரு விளக்கமும் எந்த ஒரு கருத்தும் யாரும் கூற வேண்டாம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த விபத்து நடந்ததற்கு தமிழக அரசுக்கும் சம்பந்தம் இருக்காலாம் என்றும், பத்மநாப கொலை, ராஜீவ் கொலை, கோவை குண்டு வெடிப்பு , பிபின் ராவத் கொலை எல்லாம் திமுக ஆட்சியில் தான் என்றும், விபத்து நடந்த பகுதி கேரள எல்லை பகுதி என்பதால் நக்சல்கள் சதியாக இருக்கலாம் என்றும் தமிழகத்தில் இருப்பது 95% பேர் தேச விரோதிகள் தான் என தமிழக அரசுக்கும் நாட்டின் உயரிய ராணுவ பொறுப்பில் இருந்த அதிகாரியான பிபின் ராவத் மரணம் தொடர்பாக அவதூறாக பல கருத்துக்களை டுவிட்டர் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்ட குமரி மாவட்டம் புதுக்கடை அருகே முன்சிறை பகுதியை சேர்ந்த சிபின் 24 என்ற வாலிபரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து அவர் மீது 153A,505/1b, 504 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்த வாலிபர் பாஜக அனுதாபியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.