Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
கடலூர், திட்டக்குடியில் நடந்த விபத்தில் கார்கள் மீது அரசுப்பேருந்து மோதியதில் 7 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது திட்டக்குடி. இங்கு எழுத்தூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த பகுதியின் நெடுஞ்சாலையில் தொடர்ந்து போக்குவரத்து பரபரப்பாகவே காணப்படும்.
7 பேர் மரணம்?
இந்த நிலையில், இன்று எழுத்தூர் அருகே இந்த நெடுஞ்சாலையில் பேருந்து மீது இரண்டு கார்கள் மோதி கோர விபத்து நடந்தது. இந்த விபத்தில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி பயணித்த காரில் இருந்த 7 பேரும் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசுப் பேருந்து டயர் வெடித்து திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த கோர விபத்து அரங்கேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தவுடன், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
நடந்தது என்ன?
திருச்சியில் இருந்து சென்னை நோக்கி அரசுப்பேருந்து சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது, திடீரென அரசுப்பேருந்தின் டயர் சம்பவ இடத்தில் வெடித்துள்ளது. இதனால், வேகமாக சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி எதிர்திசைக்குச் சென்றுள்ளது.
அப்போது, எதிரே வந்த 2 கார்கள் மீதும் இந்த அரசுப்பேருந்து வேகமாக மோதியுள்ளது. இதில் காரில் இருந்த 7 பேரும் பரிதாபமாக சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் பேருந்தில் இருந்தவர்களுக்கும் சிறு, சிறு காயங்கள் ஏற்பட்டது. ஆனாலும், விபத்தில் அந்த 2 கார்களும் மொத்தமாக உருக்குலைந்தது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு ராமநத்தம் காவல்துறையினர் விரைந்தனர். அவர்கள் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் சோகம் ஏற்பட்டு்ள்ளது. கிறிஸ்துமஸிற்கு முதல் நாள் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது அந்த பகுதி மக்கள் வேதனைக்கு ஆளாகியுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் சிறிது நேரம் ஏற்பட்டது.





















