TVK Madurai Maanadu: கவின் ஆணவக்கொலை மறந்துட்டீங்களா விஜய்?.. என்னங்க சார் உங்க கொள்கை.. வெரி ராங் ப்ரோ
மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் கவின் ஆணவக்கொலை தொடர்பாக விஜய் பேசாதது குறித்து விமர்சனம் எழுந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியில் நடந்த தவெகவின் முதல் மாநாட்டை காட்டிலும் மதுரை மாநாடு தமிழக அரசியலில் மக்களின் கவனத்தை பெற்றிருக்கிறது. இந்த மாநாட்டில் பல சுவாரஸ்யமான அனுபவங்களும், விபரீத மரணங்களும் அரங்கேறியுள்ளது. குறிப்பாக பவுன்சர்கள் முறையாக இந்த மாநாட்டை கையாளவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், மதுரையில் நடந்த தவெக இரண்டாவது மாநில மாநாட்டில் முன்பை விட விஜய் ஆவேசமாக பேசினார். 34 நிமிடங்கள் இந்த மாநாட்டில் விஜய் பேசி முடித்தார். மாநாடு முடிவடைந்த நிலையில், தவெக தொண்டர்கள் வீட்டிற்கு கலைந்து செல்கின்றனர்.
விஜய் மாஸ் பேச்சு
மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவும், பெண்களை மையப்படுத்தியும், அவர்களது பாதுகாப்பு குறித்தும் பேசியது கவனத்தை பெற்றுள்ளது. அதேபோன்று திமுக , அதிமுக மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்தும் பேசியிருந்தார். குறிப்பாக தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஸ்னோலின் குறித்தும் விஜய் பேசியிருந்தார். நீட் தேர்வு குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் கடும் விமர்சனம் வைத்தார். இவையனைத்தும் மக்களை கவரும் பேச்சாகவே பார்க்கப்படுகிறது.
ஆணவக்கொலைக்கு எதிராக பேசுவாரா?
ஆனால், கடந்த மாதம் நெல்லையில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் ஆணவக்கொலை குறித்து இந்த நிமிடம் வரை விஜய் பேசாமல் மெளனம் காத்து வருவதை அரசியல் தளத்தில் கவனிக்க கூடிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. கவின் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. விஜய்க்கு இது தெரியாமல் இருக்குமா என்பதே சமூக ஆர்வலர்களின் கேள்வியாக இருக்கிறது. கட்சி நிர்வாகிகளிடம் இதுகுறித்து கேட்டு தெரிந்துகொள்ள நேரம் இல்லையா, அல்லது சாதிய வாக்குகள் சரிந்துவிடும் என்ற பயம் விஜய்க்கு வந்துவிட்டதா என்பதே சமூக ஆர்வலர்களின் கேள்வியாக இருக்கிறது. விஜய்யின் இந்த மவுனம் ஆபத்தானது என்று அரசியல் விமர்சகர்களும் கருத்து தெரிவித்திருந்தனர்.
அம்பேத்கர், பெரியார் கொள்கை எதற்கு
மாநாட்டில் பல விசயங்களை பேசியவர், கவின் ஆணவக்கொலை குறித்து தெரிந்தும் பேசாமல் இருந்துவிட்டாரா? லாக்கப் மரணத்தால் உயிரிழந்த அஜித்தின் வீட்டிற்கு செல்ல தெரிந்த தவெக தலைவர் விஜய் கவின் குடும்பத்தினருக்கு பெயரளவிற்கு கூட ஆறுதல் தெரிவிக்கவில்லை. ஆணவக்கொலைக்கு எதிராக அறிக்கை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆணவக்கொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வர விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளை தொடர்ந்து சமூக ஆர்வலர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால், புதியதாக கட்சி தொடங்கிய விஜய் இதுதொடர்பாக ஒரு துரும்பை கூட அசைக்கவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்று.
ஏமாற்றம் அளித்த விஜய்
இச்சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிடாத நிலையில், மதுரை மாநாட்டில் ஆணவக்கொலைக்கு எதிராக விஜய் பேசுவார் என்ற எதிர்பார்ப்பும் வீண் ஆனது. ஆனால், கொள்கை தலைவர்களாக அம்பேத்கரையும், பெரியாரையும் வைத்திருக்கும் விஜய்யின் உண்மை முகம் தற்போது தெரிந்துவிட்டது என சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மதுரை மாநாட்டில் ஆணவக்கொலைக்கு எதிராக சிறிய அளவிலான எதிர்ப்பை தெரிவித்திருக்கலாம் என்பதே பலரது கருத்தாக உள்ளது.





















