"கருப்புப்பூஞ்சை தொற்றை எதிர்கொள்ள தயார்படுத்துங்கள்" - ராமதாஸ்

ஆங்கிலத்தில் மியூகோர்மைகோசிஸ் (Mucormycosis) என்ற மருத்துவப் பெயரால் அழைக்கப்படும் கருப்புபூஞ்சை மிகவும் அரிதான, அதே நேரம் மிகவும் கொடிய நோய் : ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில், “தமிழ்நாட்டை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் பரவல் அச்சத்திலிருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில், கருப்புப் பூஞ்சை எனும் உயிர்க்கொல்லி நோய் வேகமாகப் பரவத் தொடங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இதனால் மக்களிடம் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், அந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, கருப்புப் பூஞ்சை நோயை பதற்றமின்றி எதிர்கொள்ள தயார்படுத்த வேண்டும்.


ஆங்கிலத்தில் மியூகோர்மைகோசிஸ் (Mucormycosis) என்ற மருத்துவப் பெயரால் அழைக்கப்படும் கருப்புபூஞ்சை மிகவும் அரிதான, அதே நேரத்தில் மிகவும் கொடிய நோய் ஆகும். இந்த பூஞ்சைநோய் அனைவரையும் தாக்காது என்பதால் அச்சம் தேவையில்லை; கவனமும் விழிப்புணர்வும் இருந்தால் போதுமானது. நோய் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்காக எடுத்துக் கொள்ளும் ஸ்டீராய்ட் மருந்துகள், நமது உடலில் இயல்பாக உள்ள கிருமிகளை எதிர்த்துப் போராடும் திறனை தற்காலிகமாக குறைப்பதால் அதைப் பயன்படுத்தி நம்மை சுற்றி காற்றிலும், அழுகிய பழங்கள் மற்றும் காய்கறிகளிலும் வாழும் கருப்புப் பூஞ்சைகள் கண்கள், வாய் வழியாக நமது குருதியில் கலந்து நோயை உருவாக்குகின்றன.


இந்தியாவில் முதலில் உத்தரப்பிரதேசம், பிகார், மராட்டியம், தில்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஆயிரக்கணக்கானவர்களை தாக்கிய இந்த நோய் இப்போது தமிழ்நாட்டிலும் பரவத் தொடங்கியுள்ளது.  மதுரை மாவட்டத்தில் மட்டும் 50&க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுரேஷ் என்ற இளைஞருக்கு கருப்புப் பூஞ்சை நோயும் ஒரே நேரத்தில் தாக்கி, பார்வையை பறித்துள்ளது. சென்னையில் 12 வயது சிறுமி இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த நோயின் பாதிப்புகள் தென்படத் தொடங்கியுள்ளன. அதே நேரத்தில் இந்த நோய் குறித்த விழிப்புணர்வு இல்லை என்பதால் மக்களிடம் ஒருவிதமான அச்சம் பரவி வருகிறது. அது உடனடியாக போக்கப்பட வேண்டும்.


கருப்புப் பூஞ்சை கொடிய நோய் என்பதில் ஐயமில்லை. ஆனால், அது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு தொற்றக்கூடிய நோயோ, குணப்படுத்த முடியாத நோயோ அல்ல. கண்பார்வையை பறிப்பது மட்டுமின்றி, மூளைக்கும் வேகமாக பரவி உயிரையும் பறிக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். கொரோனா நோய்க்கான சிகிச்சையின் போது ஸ்டீராய்ட் மருந்து செலுத்தப்பட்டதால்  குருதி சர்க்கரை அளவு கட்டுப்படுத்த முடியாத அளவு அதிகரிப்பவர்களுக்கு தான் இந்த நோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆனாலும் கொரோனாவால் பாதிக்கப்படாதவர்களும் கூட, சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்பட்சத்தில் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டியது அவசியம். கண்களில் வீக்கம், வலி, கண்கள் சிவத்தல், பார்வைத் திறன் குறைதல், முகத்தில் வீக்கம், மூக்கிலிருந்து குருதி கலந்த திரவம் வடிதல் ஆகியவை கருப்புப் பூஞ்சை நோயின் அறிகுறிகள் ஆகும். இத்தகைய அறிகுறிகள்  உள்ளவர்கள் உடனடியாக மருத்துவர்களை அணுகுவதன் மூலம் நோய் பாதிப்பிலிருந்து மீள முடியும்.


கருப்புப் பூஞ்சை நோய் தொடர்பாக தமிழகம் இப்போது எதிர்கொண்டு வரும் பெரும் பிரச்சினை இந்த நோய்க்கான மருந்து கிடைப்பதில் தட்டுப்பாட்டை போக்குவதும், இது தொடர்பாக மக்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்குவதும் ஆகும். யார், யாரையெல்லாம் இந்த நோய் தாக்கும்? அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்? இதற்கான சிகிச்சை வசதிகள் எந்தெந்த மருத்துவமனைகளில் கிடைக்கும்? கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மட்டும்தான் தாக்குமா அல்லது சர்க்கரை அளவு அதிகமாக உள்ள அனைவரையும் இந்த நோய் தாக்குமா? என்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதற்காக மருத்துவ வல்லுனர்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனைகளை தொலைக்காட்சிகள் மூலம் குறிப்பிட்ட இடைவெளியில் ஒளிபரப்பச் செய்ய வேண்டும். கருப்புப் பூஞ்சை நோயை குணப்படுத்துவதற்கான ஆம்போடெரிசின்-பி (Amphotericin B) எனப்படும் ஊசி மருந்துக்கு கடுமையாக தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சென்னை தவிர்த்த பிற நகரங்களில் இந்த மருந்து கிடைக்கவில்லை. நாடு முழுவதும் இந்த மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுவதால்  6 லட்சம் டோஸ் மருந்துகளை மத்திய அரசு இறக்குமதி செய்திருப்பதாக தெரிகிறது. அதிலிருந்து  தமிழகத்திற்குரிய பங்கை பெற்றும், இந்த மருந்தை தயாரிக்கும் 6 தனியார் நிறுவனங்களிடமிருந்து  கொள்முதல் செய்தும் முதல்கட்டமாக தமிழகத்திலுள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள் ஆகியவற்றில் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அடுத்தக் கட்டமாக வட்ட மருத்துவமனைகளிலும் இந்த மருந்து மற்றும் மருத்துவ வசதியை உறுதி செய்ய வேண்டும். கருப்புப் பூஞ்சை நோய் குறித்த விவரங்களை அறிந்து விழிப்புடன் இருப்பதாலும், அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுகுவதன் மூலமும் இந்த நோயை வெல்லமுடியும். எனவே, மக்கள் கருப்புப் பூஞ்சை நோய் குறித்த அச்சம் இல்லாமல் விழிப்புணர்வுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Tags: Corona covid 19 COVID Ramadoss pmk Black Fungus white fungus

தொடர்புடைய செய்திகள்

#ArrestMadanop: யூ ட்யூபர் மதனுக்கு எதிராக தொடர்ந்து வலுக்கும் வலைதள பதிவுகள்..!

#ArrestMadanop: யூ ட்யூபர் மதனுக்கு எதிராக தொடர்ந்து வலுக்கும் வலைதள பதிவுகள்..!

TN Collectors appointment : 24 மாவட்டங்களுக்குப் புதிய ஆட்சியாளர்கள் நியமனம்!

TN Collectors appointment : 24 மாவட்டங்களுக்குப் புதிய ஆட்சியாளர்கள் நியமனம்!

செங்கல்பட்டு : ஒரு மாதத்தில் 1,058 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பு..!

செங்கல்பட்டு : ஒரு மாதத்தில் 1,058 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பு..!

காஞ்சிபுரம் : குறைகிறது கொரோனா தொற்று எண்ணிக்கை! 13 பேர் உயிரிழப்பு..!

காஞ்சிபுரம் : குறைகிறது கொரோனா தொற்று எண்ணிக்கை! 13 பேர் உயிரிழப்பு..!

Shankar Jiwal on Madhan : யூ ட்யூபர் மதன் மீது நிச்சயம் நடவடிக்கை - சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்!

Shankar Jiwal on Madhan : யூ ட்யூபர் மதன் மீது நிச்சயம் நடவடிக்கை - சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்!

டாப் நியூஸ்

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு