கரூர் : தேங்கும் தடுப்பூசி பணிகள் : சுகாதாரத்துறை இணை இயக்குனரின் புதிய அறிவிப்பு!
தடுப்பூசி பற்றாக்குறையால் கரூரில் கடந்த நான்கு நாட்களுக்கு மேல் கொரோனா தடுப்பூசி முகாமில் ஊசி போடுவது நிறுத்தப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையின் சார்பாக கொரோனா சிறப்பு தடுப்பூசி மருத்துவ முகாம் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு மேல் கொரோனா தடுப்பூசி முகாம் தடுப்பு ஊசிகள் போடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் கடந்த 6-ஆம் தேதி ஆயிரம் பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டது. அதன் பின்னர் தடுப்பூசி இருப்பு இல்லாதால் கடந்த 4 நாட்களாக செலுத்தப்படவில்லை. கரூர் நகரில் கொரோனா தடுப்பூசி போடப்படும் பசுபதீஸ்வரா பெண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகம் பூட்டிக்கிடக்கிறது. இங்கு, மீண்டும் கொரோனா தடுப்பூசி வந்த பின்னர் ஊசிபோடுவது குறித்து அறிவிக்கப்படும். முன்பதிவு இல்லை எனவும் , கோவாக்சின் தடுப்பூசி இரண்டாவது தவணை 28 நாட்களில் இருந்து 45 நாட்களுக்குள் போடப்படும். கோவிஷீல்டு இரண்டாவது தவணை தடுப்பூசி 84 நாட்களில் இருந்து 112 நாட்களுக்குள் போடப்படும் என்று அறிவிப்பு பலகை சுகாதாரத்துறையின் சார்பாக வைக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் நான்கு சட்டசபை தொகுதியில் மட்டும் சுமார் 10 லட்சம் மக்கள் வசிக்கும் நிலையில் கடந்த 6-ஆம் தேதி வரை மொத்தம் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 676 பேருக்கு தான் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்பது குறித்து கரூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் சந்தோஷ்குமாரிடம் கேட்டபோது, “சென்னையில் இருந்து திருச்சி மண்டலத்துக்கு கொரோனா தடுப்பூசி வந்தவுடன், அங்கிருந்து கரூர் மாவட்டத்துக்கு எடுத்து வரப்படும். இன்னும் 2 நாட்களில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். கொரோனா தடுப்பூசி வந்ததும் பொதுமக்களுக்கு செலுத்துவது குறித்து முறையாக அறிவிப்பு வெளியிடப்படும்” என்றார்.
தமிழகத்தில் மத்திய அரசு வழங்க இருந்த தடுப்பூசிகள் வர தாமதமானதால், கரூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம்களில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாத நிலையில் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டது. அதை தொடர்ந்து, இன்று கரூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் இன்னும் இரண்டு நாளில் தடுப்பூசி படிப்படியாக பொதுமக்களுக்கு போடப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் நாள்தோறும் பல்வேறு இடங்களில் காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை காய்ச்சல் முகாம் நடைபெற்றுவருகிறது. அதிலும் குறிப்பாக இன்று 22 பஞ்சாயத்துகளில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக காய்ச்சல் முகாம் நடைபெற்றது. அதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.