ஏன் இப்படி இருக்காங்க! கண்டிக்கவே இல்ல? - அதிமுகவை சரமாரியாக சாடிய செல்வ பெருந்தகை!
அண்ணா திமுக என்று சொல்கிறார்கள். அண்ணாவுக்கு குரு, பிதாமகனே பெரியார்தான்.

அதிமுக பெரியாரை ஏற்றுக்கொள்ள வில்லையா என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அதிமுக பெரியாரை ஏற்றுக்கொள்ளவில்லையா? ஏன் சாஃப்ட்டா இருக்காங்க? சீமானை ஏன் கண்டிக்கவில்லை. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அதிமுகவை ஆரம்பிக்கும்போது பெரியார் படத்தோடு அவரை தலைவராக ஏற்றுக்கொண்டார். அண்ணா திமுக என்று சொல்கிறார்கள். அண்ணாவுக்கு குரு, பிதாமகனே பெரியார்தான். இப்போது எதுக்கு பெரியாரை விமர்சிக்கும்போது அதிமுக அமைதியா இருக்காங்க. நாங்கள் கண்டிக்கிறோமே. அவங்க ஏன் கண்டிக்க மாட்டேங்குறாங்க.
பாஜக கண்டிக்க மாட்டாங்க. ஏனென்றால் பாஜகவின் செயல் திட்டங்களை சீமான் நடைமுறைப்படுத்துகிறார். இந்துத்துவா நடைமுறைகளை சீமான் நடைமுறைப்படுத்துகிறார். அவர் பாஜகவின் ஊதுகோலாக இருக்கிறார்.
அவங்களால் பேச முடியாததையெல்லாம் சீமானை வைத்து பேச வைக்கிறார்கள். அதுக்காக அதிமுக ஏன் மவுனமாக இருக்க வேண்டும்? பெரியார் இந்த தேசத்தின் சொத்து. அதிமுக பாஜகவை புறக்கணித்திருப்பது வருங்கால சட்டமன்ற தேர்தலில் யுக்தியா என தெரியாது. ஒவ்வொரு கட்சிக்கும் முடிவெடுக்கின்ற உரிமை உள்ளது. ஜனநாயக முறைப்படை இடைத்தேர்தலை சந்திக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். அது அவர்களுடைய விருப்பம். ஈரோடு சிங்கம் பெரியர். ஈரோட்டில் இடைத்தேர்தல் வருகிறது. பெரியாரை விமர்சனம் செய்துவிட்டு எப்படி அங்கே சென்று சீமான் வாக்கு கேட்க முடியும்? அதில் வரும் எதிர்வினைகளை சீமான் சந்தித்துதான் ஆகவேண்டும்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக பெரியார் என்ன புரட்சி செய்தார் எனவும் தமிழ், தமிழ்நாடு பற்று இல்லாதவர் பெரியார் எனவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சரமாரியாக சாடியிருந்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் சீமானுக்கு கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் சீமான் மீது பல்வேறு காவல்நிலையங்களில் பல்வேறு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் சர்ச்சையான கருத்து பேசியதாகவும், வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதாகவும் கூறி பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

