‘தலித் முதல்வராக முடியாது’ - திருமாவின் கருத்துக்கு கார்த்திக் சிதம்பரம் கூறியது என்ன?
தமிழகத்தில் ஒரு தலித் முதல்வராக வர முடியாது என விடுதலைகள் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்திருப்பது உண்மைதான் - காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம்.
பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீட்டு உரிமையை நசுக்கும் வகையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு இருப்பதாகவும், பட்டியலின சமூகத்தின் இடஒதுக்கீட்டு அளவை அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி விசிக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தொல்.திருமாவளவன் கூறியது..
தமிழ்நாட்டில் எத்தனையோ கட்சிகள் வரலாம், போகலாம். ஆனால் ஒரு காலத்திலும் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர் தமிழகத்தின் முதல்வராக ஆக முடியாது.
மேலும், நிறைய பேர் ஜனநாயகம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பாடம் எடுக்கிறார்கள். விசிகவிற்கு ஜனநாயகம் குறித்து யாரும் பாடம் எடுக்க தேவையில்லை. சாதி ஒழிப்பு என்பது தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நோக்கம். ஆனால் திமுக மீது நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்தார்.
இந்நிலையில் திருமாவளவனின் கருத்து உண்மை தான் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காாங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தத்து பேசியபோது...
திருமாவின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
தமிழகத்தில் ஒரு தலித் முதல்வராக வர முடியாது என விடுதலைகள் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்திருப்பது உண்மைதான். அதிகம் அமைச்சராகவே இல்லையே. தமிழ்நாடு மட்டுமல்ல பல மாநிலங்களில் இதே நிலைதான் நிலவுகிறது. பல மாநில மக்கள் ஒரு தலித் தலைவர் முதலமைச்சராக இருப்பதை விரும்பவில்லை. இது மறுக்க முடியாத உண்மை ஆகும்.
தமிழகத்திலும் அப்படித்தான் உள்ளது, அதே நேரத்தில் வரும் காலங்களில் இது மாற வேண்டும். நிச்சயம் ஒரு தலித் தமிழக முதலமைச்சராகும் போது வரவேற்பேன் என்றார்.