" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல் ஆய்வாளரின் ஓட்டுனர்.

" கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை "
கோவை மாவட்டம் கிணத்துக் கடவு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் வழக்கம் போல் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி இயக்கப்பட்ட பேருந்தில் கல்லூரிக்கு செல்வதற்காக பயணம் செய்துள்ளார். அப்போது பேருந்தில் வழக்கத்தை விட அதிக அளவில் கூட்டம் இருந்ததால் , இருக்கை கிடைக்காமல் பேருந்தின் படிக்கட்டு பகுதியில் நின்றபடி அவர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் அதே பேருந்தில் பயணம் செய்த ஒருவர் , மாணவிக்கு உதவுவது போல் நடந்து கொண்டு அவரிடம் பாலியல் ரீதியாக அத்து மீறியதாக கூறப்படுகிறது. திடீரென ஏற்பட்ட இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த மாணவி, தனது கல்லூரி அமைந்துள்ள ஈச்சனாரி பேருந்து நிறுத்தத்தில் இறங்கியதும் , உடனடியாக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை அணுகி சம்பவம் குறித்து புகார் அளித்தார்.
" காவல் ஆய்வாளரின் ஓட்டுனர் "
புகாரை பெற்ற மகளிர் காவல் நிலைய போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். பேருந்தில் இருந்த பயணிகளிடம் விசாரணை நடத்துதல் , சம்பவம் தொடர்பான தகவல்களை சேகரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. விசாரணையின் போது , மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் , போத்தனூர் காவல் நிலைய குற்றப் பிரிவு காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றி வந்த காவலர் மணிவேந்தன் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து , காவலர் மணிவேந்தன் மீது பொருந்தும் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் , அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் , சம்பவம் குறித்து காவல்துறை நிர்வாக ரீதியிலான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Before You Go
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
ட்ரெண்டிங் செய்திகள்






















