உச்சம் தொடும் தேங்காய் விலை.. இனி சட்னி செய்வது கஷ்டம்தான் போல.. அட கடவுளே
கடந்த 2023ஆம் ஆண்டு, 18 ரூபாய் முதல் 19 ரூபாய் வரை விற்கப்பட்ட ஒரு கிலோ தேங்காய் விலை, கடந்த இரண்டு ஆண்டுகளில் மரங்கள் வெட்டப்பட்டு சாகுபடி குறைந்ததால் மூன்று மடங்கு அதிகரித்தது.

வேர் வாடல் நோய் (Root Wilt Disease) காரணமாக கோயம்புத்தூரில் 40,000 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ள 28 லட்சம் தென்னை மரங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெட்டப்பட உள்ளதால் தமிழகத்தில் தேங்காய் விலை மேலும் உயரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2023ஆம் ஆண்டு, 18 ரூபாய் முதல் 19 ரூபாய் வரை விற்கப்பட்ட ஒரு கிலோ தேங்காய் விலை, கடந்த இரண்டு ஆண்டுகளில் மரங்கள் வெட்டப்பட்டு சாகுபடி குறைந்ததால் மூன்று மடங்கு அதிகரித்தது.
உயர்கிறது தேங்காய் விலை - Coconut Price Hike
சாம்பார் தொடங்கி பொரியல் வரை எல்லா உணவுகளிலும் சேர்க்கக்கூடிய மூலப்பொருளாக தேங்காய் உள்ளது. சைவம், அசைவம் என எந்த உணவாக இருந்தாலும் அதில் தவிர்க்க முடியாத அங்கமாக இருக்கும் தேங்காய், ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்கிறது. இப்படி, அத்தியாவசிய உணவு பொருள்களில் ஒன்றாக உள்ள தேங்காயின் விலை மேலும் உயர உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான தேங்காயை உற்பத்தி செய்யும் மாவட்டமாக இருப்பது கோயம்புத்தூர். இந்த மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 20 சதவிகிதம் நிலப்பரப்பு தென்னை சாகுபடிக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், வேர் வாடல் நோய் காரணமாக மாவட்டம் முழுவதும் 40,000 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ள 28 லட்சம் தென்னை மரங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெட்டப்பட உள்ளது. இதன் விளைவாக சாகுபடி குறைய உள்ளது. எனவே, தமிழகத்தில் தேங்காய் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காரணம் என்ன - Reason for Coconut Price Hike
இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி கூறுகையில், "இந்தியாவில் கர்நாடகாவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு இரண்டாவது பெரிய தேங்காய் சாகுபடி பரப்பளவைக் கொண்டுள்ளது. கோவையில் மட்டும் மொத்த பயிர் பரப்பளவு 2.10 லட்சம் ஏக்கர்.
ஆனால், 2019 ஆம் ஆண்டு முதல், கேரளாவில் இருந்து வேர் வாடல் நோய் வேகமாகப் பரவி வருவதால் தமிழ்நாடு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நோயைக் கட்டுப்படுத்த எந்த தடுப்பு நடவடிக்கைகளும் இல்லாததால், தென்னை பண்ணைகள் நாசமாகி வருகிறது. இந்த நோய் தொடங்கிய கேரளாவில் வெற்றிகரமாக ஒழிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில், தோட்டக்கலைத் துறை எந்த ஒருங்கிணைந்த முயற்சியையும் எடுக்கவில்லை. இந்த நோயின் காரணமாக உற்பத்தி கிட்டத்தட்ட 60% குறைந்துள்ளது" என்றார்.
கவலை தெரிவிக்கும் விவசாயிகள்:
பொள்ளாச்சியில் விவசாயிகளிடமிருந்து தேங்காய்களை கொள்முதல் செய்யும் வியாபாரி ஜீவானந்தம், இதுகுறித்து கூறுகையில், "2023 ஆம் ஆண்டில், தேங்காய் கிலோவுக்கு 18 முதல் 19 ரூபாயாக இருந்தது. வேர் வாடல் நோய் காரணமாக, மகசூல் வெகுவாகக் குறைந்துள்ளது.
வழக்கமாக, ஒரு ஏக்கரில் 2,000 தேங்காய்களை சாகுபடி செய்வோம். இப்போது, அது 800 தேங்காய்களாகக் குறைந்துள்ளது. இதனால் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு கிலோவுக்கு ரூ.55 ஆக உயர்ந்துள்ளது. மகசூல் தொடர்ந்து சரிந்தால் இது மேலும் உயரக்கூடும்" என்றார்.





















