TN Govt: அதிகாரப்பூர்வ அறிவிப்பு..! ஆளுநரிடம் இருந்து பறிப்பு, இனி முதலமைச்சர் தான் பல்கலை., வேந்தர் - அரசாணை வெளியீடு
TN Govt: உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்த 10 மசோதாக்களையும் சட்டமாக்கி தமிழ்நாடு அரசு, அரசிதழில் வெளியிட்டுள்ளது.

TN Govt: உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்த 10 மசோதாக்களையும் சட்டமாக்கி தமிழ்நாடு அரசு, அரசிதழில் வெளியிட்டுள்ளது.
அரசிதழில் வெளியிட்ட தமிழ்நாடு அரசு:
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பிய நவம்பர் 18, 2023ம் ஆண்டு முதலே, குறிப்பிட்ட 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் கிடைத்ததாக அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 மசோதாக்களும் சட்டமாக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அரசு வசமான துணைவேந்தர் நியமனம்:
அதில் இடம்பெற்று இருந்த தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் மசோதாவும் சட்டமாகியுள்ளதால், இனி பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநர் ரவி நீக்கப்பட்டுள்ளார். இனி தமிழ்நாட்டில் உள்ள 13 அரசு பல்கலைக்கழகங்களுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினே வேந்தராக செயல்படுவார். அதோடு, மாநில அரசு அமைக்கும் குழு பரிந்துரைக்கும் 3 பேரில் இருந்து ஒருவரே, பல்கலைக்கழகங்களுக்கான துனைவேந்தராக நியமிக்கப்படுவர். அதற்கு ஆளுநரின் ஒப்புதலை பெற வேண்டியது அவசியமில்லை. ஆளுநரை தேடுவதற்கான குழுவில் பல்கலைக்கழக மானியக்குழுவின் பிரதிநிதி இடம்பெற வேண்டும் என்ற விதியும் இனி தமிழ்நாட்டிற்கு பொருந்தாது.
சட்டமான 10 மசோதாக்கள்:
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு மீன்வள பல்கலைக் கழக மசோதா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக மசோதா, திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் மசோதா, டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக மசோதா, டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழக மசோதா, வேளாண்மைப் பல்கலைக் கழக மசோதா, தமிழ்நாடு பல்கலைக் கழகங்கள் இரண்டாவது திருத்த மசோதா, தமிழ் பல்கலைக் கழக இரண்டாவது திருத்த மசோதா, மீன்வள பல்கலைக் கழக மசோதா, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக மசோதா ஆகியவற்றிற்கு ஒப்புதல் கிடைத்தது. அவை தற்போது சட்டமாகவும் அங்கீகரிக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆளுநரை சாடிய உச்சநீதிமன்றம்
சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றிய மசோதக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தது தொடர்பான வழக்கில் அண்மையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது, “பொதுவான விதியின்படி மாநில அரசின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரையின்படியே ஆளுநர் செயல்பட முடியும். ளுநருக்கு என தனிப்பட்ட (VETO) அதிகாரம் இல்லை. இரண்டாவதாக நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பியது சட்டவிரோதம். இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு அன்றே ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை. எனவே அந்த உத்தரவை ரத்து செய்கிறோம். அந்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளிக்கிறது. எதிர்காலத்தில் சில பிரிவுகளில் ஒரு மாதத்திலும் சில பிரிவுகளில் 3 மாதங்களிலும் மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும்” என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் உத்தரவிட்டனர்.





















