Stalin Hits BJP ADMK: மணிப்பூருக்கு அனுப்பாத குழுவை கரூருக்கு அனுப்பியது ஏன்.? - பாஜகவை வெளுத்த முதல்வர் ஸ்டாலின்
பாஜக, மணிப்பூருக்கு அனுப்பாத குழுவை கரூருக்கு ஏன் அனுப்பியது என்று கேள்வி எழுப்பிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதற்கான பதிலையும் அவரே தெரிவித்தார். அது என்ன தெரியுமா.?

ராமநாதபுரத்தில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில், பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்வில் உரையாற்றிய அவர், பாஜக, அதிமுக என வரிசைகட்டி விமர்சித்தார். மணிப்பூருக்கு குழு அனுப்பாத பாஜக, கரூருக்கு ஏன் அனுப்பியது என கேள்வி எழுப்பிய அவர், அதற்கான விடையையும் கூறினார். அவர் பேசிய விவரங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
மக்கள் நல்லிணக்கத்தோடு வாழும் மண் ராமநாதபுரம் - முதலமைச்சர்
ராமநாதபுரம் மக்களிடையே உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பல்வேறு பெருமைகளுக்கு சொந்தமான மண் ராமநாதபுரம் என்றும், மக்கள் நல்லிணக்கத்தோடு வாழும் மண் என்றும் புகழாரம் சூட்டினார்.
வரும் டிசம்பரில் ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்ட விரிவாக்கம் தொடங்கி வைக்கப்படும் என தெரிவித்த அவர், அதன் மூலம் 2.95 லட்சம் மக்கள் பயன்பெற உள்ளதாக கூறினார். இனிமேல் ராமநாதபுரம் மாவட்டத்தை தண்ணியில்லா காடு என சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் 2.36 லட்சம் பெண்கள் மகளிர் உரிமை தொகை பெறுவதாக குறிப்பிட்டார் முதலமைச்சர்.
பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்
ராமநாதபுரத்திற்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை 30 கோடி ரூபாய் செலவில் 4 வழியிலிருந்து 6 வழிச்சாலையாக மாற்றப்படும் என அறிவித்தார்.
திருவாடனை, ஆர்.எஸ். மங்கலம் வட்டங்களில் 16 கண்மாய்கள் 18 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும் என கூறிய அவர், பழைய பேருந்து நிலையம் நவீன வணிக வளாகமாக மாற்றி அமைக்கப்படும் என்றும், பரமக்குடி நகராட்சிக்கு புதிய கட்டடம் கட்டப்படும் என்றும் அறிவித்தார்.
பாஜகவிற்கு சரமாரி கேள்வி
மத்திய பாஜக அரசு மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பல்வேறு கேள்விகளையும் எழுப்பினார்.
மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், கச்சத்தீவை மீட்க இலக்கை அரசுக்கு கோரிக்கை வைக்கக் கூட மத்திய அரசு மறுப்பதாக தெரிவித்தார். நமது மீனவர்களை காக்கவும் எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை என்றும் அவர் சாடினார்.
தமிழகத்திற்கு எதிராகவே மத்திய அரசு செயல்படுவதாக குறிப்பிட்ட முதலமைச்சர், மாநில நலன்களை புறக்கணித்து மாநில உரிமைகளை அவர்கள் பறிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
மணிப்பூருக்கு குழு அனுப்பாத பாஜக அரசு, கரூருக்கு குழு அனுப்புவது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் வருவதாலேயே மத்திய அரசு குழுவை அனுப்பியதாக சுட்டிக்காட்டினார்.
அதிமுகவையும் சாடிய மு.க. ஸ்டாலின்
அதிமுகவை மறைமுகமாக தாக்கிப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டின் மீது அக்கறை உள்ள யாரும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டார்கள் என்றும், தவறு செய்தவர்கள் அனைவரும் தவறில் இருந்து தப்பிக்க பாஜக உடன் சேருவதாகவும் விமர்சித்தார்.
மேலும், கூட்டணியில் ஆள் சேர்க்கும் அசைன்மென்ட்டை எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக கொடுத்துள்ளதாகவும் நேரடியாகவே சாடினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.





















