உயிரியல் பூங்காக்களில் அடிப்படை வசதிகள்.. மாற்றுத்திறனாளிகளுக்கான கூடுதல் அம்சங்கள் - முதலமைச்சர் அறிவிப்பு
தமிழ்நாட்டில் உள்ள வன உயிரியல் பூங்காக்களில் அடிப்படை வசதிகளுடன், மாற்றுதிறனாளிகளுக்கான கூடுதல் வசதிகளும் ஏற்படுத்தப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில், வன உயிரியல் பூங்கா ஆணையக்கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் வனத்துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இயற்கை மற்றும் வன உயிரினங்கள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதிலும், அழிந்து வரும் வனவிலங்குகளை பாதுகாப்பதிலும் உயிரியல் பூங்காக்கள் முக்கிய பங்காற்றுவதாக பாராட்டினார்.
ஆதரவற்ற விலங்குகளின் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையமாகவும் செயல்படுவதன் மூலம் வனவிலங்கு பாதுகாப்பிலும், அதுதொடர்பான மிகவும் பயனுள்ள ஆராய்ச்சிகளிலும் வன உயிரின பூங்காக்கள் இன்றியமையா பங்கு வகிப்பதாகவும் கூறினார்.
கொரோனா காலத்தில் வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்பட்டபோது, அதன் பராமரிப்பு பணிகளுக்காக ரூ.6 கோடியை அரசு ஒதுக்கியதை நினைவுகூர்ந்தார். உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் தொற்றால் பாதிக்கப்படுவதை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகளும், தற்போது தொடரும் தடுப்பு நடவடிக்கைகளும் பரவலாக பாராட்டப்படுவதாக கூறினார். உலகத்தரம் வாழ்ந்த உயிரியல் பூங்காக்களில் ஒன்றான வண்டலூர் உயிரியல் பூங்காவில், உள்ள விலங்குகள் முழுமையான இயற்கை சூழலில் வாழ்வதற்கு ஏற்றாற்போல இயற்கையாகவே அமைந்துள்ளது என்றார். ஆண்டிற்கு சராசரியாக 20 லட்சம் பார்வையாளர்கள் அந்த பூங்காவிற்கு வருகை தருவதாகவும் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல், காலநிலை, காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை ஆகிய துறைசர் அதிகாரிகள் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார். இயற்கை வளங்களின் சிறந்த மற்றும் அதிகபட்ச பயன்பாட்டை ஒருங்கிணைத்து மத்திய உயிரியல் பூங்கா ஆணைய விதிகளின்படி, நீண்டகால திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பூங்கா விலங்குகளுக்கு ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான சூழலை உருவாக்க வேண்டும். மாநில உயிரியல் பூங்கா ஆணையம், தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து அறிவியல் மேலாண்மை நடைமுறைகள், சிறந்த பராமரிப்பு, சுகாதாரம், மற்றும் உலகெங்கிலும் உள்ள சிறந்த நடைமுறைகளைக்கான பரிமாற்றம் செய்வதற்கான திட்டங்களை வகுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.
பூங்காக்களுக்கு வரும் பார்வையாளர்களுக்கு ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தி தருவதோடு, வன விலங்குகளின் பாதுகாப்பின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்தும் தெரியபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கான உகந்த வசதிகளை பூங்கா நிர்வாகம் செய்து தர வேண்டும் எனவும் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள பாதைகள், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஓய்வறைகள், வசதியான வாகனங்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கான வசதியான தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகிய வசதிகள் வன உயிரின பூங்காக்களில் உருவாக்கப்படும் எனவும் அறிவித்தார்.
வண்டலூர் பூங்காவோடு வேலூர் மாவட்டம் அமிர்தி மற்றும் சேலம் மாவட்டம் குறும்பப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள உயிரியல் பூங்காக்களிலும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தபப்டும் என கூறினார். வன விலங்குகள் மற்றும் பூங்காக்களில் உள்ள விலங்குளை பாதுகப்பதில் அரசு ஆழ்ந்த மன உறுதியுடன் இருப்பதாகவும், இதுதொடர்பான அதிகாரிகள் முனைப்பான ஒத்துழைப்பை வழங்குவார்கள் என நம்புவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.