47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சர் ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், தற்போது இலங்கை வசம் உள்ள 47 மீனவர்களையும், 166 மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தை நடத்திட, வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்-க்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் கடிதம்:
இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுத்திடவும், தற்போது இலங்கை வசமுள்ள 47 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட கூட்டுப் பணிக் குழுக் கூட்டத்தை உடனடியாக நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு இன்று (25.06.2024) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், 25.06.2024 அன்று, IND-TN-12-MM-5138 என்ற பதிவு எண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக வேதனையுடன் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் , 2024 ஆம் ஆண்டில் மட்டும் இலங்கைக் கடற்படையினரால் இதுவரை 203 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 27 படகுகள் சிறைபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் கோடிட்டுக் காட்டியுள்ளார். இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் இதுபோன்ற அடிக்கடி கைது செய்யப்படுவது, தமிழ்நாட்டின் மீனவ சமுதாயத்தினரிடையே ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நடவடிக்கை தேவை:
எனவே, இந்த விஷயத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர், உடனடியாக தலையிட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து, இதுபோன்று கைது செய்யப்படுவதை தடுக்கவும், தற்போது இலங்கை வசமுள்ள 47 மீனவர்களையும், 166 மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும், கூட்டுப் பணிக்குழு கூட்டத்தைக் கூட்டுவதற்குத் தேவையான நடவடிக்கையை விரைந்து எடுத்திடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் தனது கடிதத்தில் கோரியுள்ளார். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.