CAA -வை ரத்து செய்யக் கோரி தீர்மானம். சட்டப்பேரவையில் இன்று இதுதான் டாப்!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் சிஏஏ அமல்படுத்தப்படாது என சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்து இருந்தார்.
தமிழ்நாடு அரசின் 16 வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 21ம் தேதி அன்று தொடங்கியது. அவையைத் தொடக்கி வைத்துப் பேசிய ஆளுநர் தமிழக அரசின் பல்வேறு முக்கிய அம்சங்களையும், திட்டங்களையும் விவரித்தார். அதன்பிறகு ஆகஸ்ட் 23 ம் தேதி துவங்கிய மானியக் கோரிக்கை மீதான விவாதம், வருகின்ற செப்டம்பர் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. சட்டமன்ற கூட்டத் தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று காலையில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறைகளுக்கான மானிய கோரிக்கை மீதான விவாதம், வாக்கெடுப்பு, அமைச்சர்கள் பதில் உரை ஆகிய அலுவல்கள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை இரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. மேலும் குடியுரிமை திருத்த சட்டத்தை இரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தியும் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த தீர்மானங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப் பேரவையில் முன்மொழிய உள்ளார்.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும் வகையில் மத்திய அரசு சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. தமிழ்நாட்டில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அச்சட்டத்திற்கு எதிர் கட்சியாக திமுக இருந்த போது, கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. கடந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது பல்வேறு இடங்களில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “சிசிஏ விவகாரத்தை நாடாளுமன்றத்தில் அதிமுக, பாமக ஆதரித்தது. சிஏஏவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் வாக்களித்தார். அதிமுக அப்போது ஆதரித்துவிட்டு இப்போது எதிர்க்கிறது. இந்த விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் வகையில் அதிமுக செயல்படுகிறது. சிஏஏவுக்கு எதிராக அதிமுக வாக்களிக்காமல் இருந்திருந்தால் அது சட்டமாகியிருக்காது. திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் சிஏஏ அமல்படுத்தப்படாது” என்று பேசினார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் சிஏஏ அமல்படுத்தப்படாது என சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்து இருந்தார். மேலும் திமுக தனது தேர்தல் வாக்குறுதியிலும் சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தெரிவித்து இருந்தது. இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்திருப்பதால், தேர்தல் வாக்குறுதியின் படி அச்சட்டத்தை இரத்து செய்யக் கோரி, தீர்மானம் நிறைவேற்ற உள்ளது.
அண்மையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.