விரைவில்...1000 அரசுப் பணியிடங்கள்: முதல்வர் அதிரடி அறிவிப்பு!
புதுச்சேரியில் 1000 அரசு பணியிடங்கள் 3 மாதத்தில் நிரப்பப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு.

புதுச்சேரியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு முதியோர் மற்றும் ஆதரவற்றோர் உதவித்தொகை வழங்கும் துவக்க விழா நடைபெற்றது. தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி மைதானத்தில் நடந்த விழாவில், ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர், பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கி துவக்கி வைத்தனர்.
சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், சாய் சரவணன்குமார், ரமேஷ், லட்சுமிகாந்தன், தலைமை செயலர் சரத் சவுகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பேசுகையில்.,
முதியோர் மற்றும் ஆதரவற்றோர் பென்ஷன் திட்டத்தில் மாதந்தோறும் 1.81 லட்சம் பயனாளிகள் பயன்பெற்று வரும் நிலையில், புதிதாக 10 ஆயிரம் பேருக்கு அக்டோபர் மாதம் முதல் உதவித்தொகை கிடைக்கும். விண்ணப்பித்து காத்திருக்கும் மேலும் 5000 பேருக்கு இன்னும் ஒரு மாதத்திற்குள் உதவித்தொகை வழங்கப்படும். அரசு பொறுப்பேற்று இதுவரை 36 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கியுள்ளது.
புதிதாக ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்
அரசு துறைகளில் காலி பணியிடங்கள் தகுதி அடிப்படையில் 4,500 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. இன்னும் 3 மாதங்களில் புதிதாக ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும். அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் புதிதாக 256 செவிலியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
விரைவில் 3 மாதங்களுக்கும் சேர்த்து அரிசி வழங்கப்படும்
விரைவில் விடுபட்ட 3 மாதங்களுக்கும் சேர்த்து அரிசி வழங்கப்பட உள்ளது. கோதுமை வழங்குவோம் என்று சொன்னோம். ஆனால் மத்திய அரசு இல்லை என கூறியுள்ளது. மீண்டும் கேட்டுள்ளோம். ஒப்பந்தம் விடப்பட்டு அரிசியுடன் கோதுமையும் சேர்த்து விரைவில் வழங்கப்படும். மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பெண்கள் உரிமைத் தொகை மற்றும் சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கான உரிமை தொகை 2,500 ரூபாய் வரும் நவம்பர் மாதம் முதல் வழங்கப்படும் முதலமைச்சர் ரங்கசாமி பேசினார்.





















