தமிழர் வரலாற்றின் சின்னமாக கீழடி அருங்காட்சியகம்.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை..
ஈராயிரம் ஆண்டுக்கும் முந்தைய தமிழர் வரலாற்றின் சின்னமாகக் கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கீழடி அருங்காட்சியம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஈராயிரம் ஆண்டுக்கும் முந்தைய தமிழர் வரலாற்றின் சின்னமாகக் கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கீழடி அருங்காட்சியம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மதுரை அருகே இருக்கும் ‘கீழடி அருங்காட்சியகம்’ 2 ஏக்கர் பரப்பில் ரூ.18.43 கோடி செலவில், தமிழர் பெருமை பேசும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை கீழடி அகழாய்வுத் தளத்தில் 2018ம் ஆண்டு முதல் தொடர்ந்து தற்போது வரை ஐந்து கட்டங்களாக அகழாய்வு மேற்கொண்டு வருகிறது. அகழாய்வுகள் மூலம் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் பொதுமக்கள் பார்க்கும் வகையில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் தமிழக மரபுசார் கட்டடக்கலை அடிப்படையில் கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று மாலை திறந்து வைத்தார். கீழடி அகழாய்வு அருங்காட்சியகத்தை திறந்து வைத்தது தொடர்பாக சமூக வலைத்தள பதிவை வெளியிட்டிருந்தார்.
அந்த பதிவில் “மனிதகுலத்தின் தொல் நாகரிக இனமாம் நம் தமிழினத்தின் பழம்பெருமையை விளக்கும் கீழடி அருங்காட்சியகத்தைத் திறந்து வைக்கும் பெரும் பேற்றை இன்று நான் பெற்றேன். ஆற்றங்கரை நாகரிகத்தின் ஆதிமுகமான வைகைக் கரையில் அமைந்திருந்த நகரத்தின் வயது 2,600 ஆண்டுகள். அகழாய்வில் அகலமாய்த் தோண்டத் தோண்ட எண்ணிலடங்காப் புதையல்களை எடுத்து வருகிறோம். கல் மணிகள் முதல் தங்க அணிகலன்கள் வரை கிடைத்திருக்கிறது.
பழந்தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுகள் துணையோடு நாம் பேசிவந்த அனைத்துக்கும் மேலும் அசைக்கமுடியாச் சான்றுகள் கிடைத்த இடம் கீழடி. இவை அனைத்தையும் அருங்காட்சியகமாக ஆக்கி வைத்திருக்கிறது நமது தமிழ்நாடு அரசு.
ஈராயிரம் ஆண்டுக்கும் முந்தைய தமிழர் வரலாற்றின் சின்னமாகக் கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் வந்து பார்க்கும் காட்சியகமாக அமைந்துள்ளது. காலத்தே பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னால் அழைத்துச் செல்லப் போகிறது. வரலாறு படிப்போம். வரலாறு படைப்போம்! “ என குறிப்பிடப்பட்டுள்ளது.