500 பெண் ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ ரிக்ஷா.. ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டம்.. தொடங்கிவைத்த முதல்வர்
500 பெண் ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ ரிக்க்ஷா வாங்குவதற்காக தலா 1 இலட்சம் மானியம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
![500 பெண் ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ ரிக்ஷா.. ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டம்.. தொடங்கிவைத்த முதல்வர் Chief Minister M.K. has starts a plan to provide a subsidy of Rs.1 lakh each 500 women drivers to buy new auto rickshaws 500 பெண் ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ ரிக்ஷா.. ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டம்.. தொடங்கிவைத்த முதல்வர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/10/0f11be26c5c96ec9e5a14c96639d0c2d1688989109665571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் 500 பெண் ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ ரிக்க்ஷா வாங்குவதற்காக தலா 1 இலட்சம் மானியம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : ”தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (10.7.2023) தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் பதிவு பெற்ற 500 பெண் ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ ரிக்சா வாங்குவதற்காக தலா 1 இலட்சம் மானியம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, வழங்கினார். 10 பயனாளிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட புதிய ஆட்டோ ரிக்க்ஷாக்களுக்கான பதிவு சான்று மற்றும் அனுமதி ஆவணங்களை வழங்கினார்.
அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பினை உறுதி செய்திடவும், அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் நல உதவிகள் வழங்கிடவும், தமிழ்நாடு அரசால் 18 அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் அமைக்கப்பட்டு சிறப்புடன் செயல்பட்டு வருகின்றன. இவ்வரசு பொறுப்பேற்ற 7.05.2021 முதல் 31.05.2023 வரை, அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் 13,80,695 தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டு, 11,81,905 பயனாளிகளுக்கு 914.27 கோடி ரூபாய் நலத்திட்ட உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம் மற்றும் மகப்பேறு உதவித்தொகை, ஓய்வூதியம், கண் கண்ணாடி வழங்குதல், விபத்து மற்றும் இயற்கை மரணங்களுக்கான நிவாரண நிதியுதவி போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாரியத்தில் தற்போது 1,74,230 தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஓட்டுநர்கள் சொந்தமாக ஆட்டோ ரிக்சா வாகனம் வாங்குவதை ஊக்குவிக்கவும், அவர்களுக்கான சுயதொழில் வாய்ப்பினை உருவாக்கிடவும், அவர்களின் வருமானம் ஈட்டும் திறன் மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பொருட்டும், 500 பெண் ஓட்டுநர்களுக்கு புதியதாக ஆட்டோ ரிக்சா வாகனம் வாங்கும் செலவினத்தில் தலா 1 இலட்சம் ரூபாய் மானியமாக வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் மானியத்திற்கு ஒப்பளிப்பு செய்யப்பட்ட 141 பயனாளிகளில் பத்து பயனாளிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட புதிய ஆட்டோ ரிக்ஷாக்களுக்கான பதிவு சான்று மற்றும் அனுமதி ஆவணங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை தலைமைச் செயலாளர் முகமது நதிமுத்தின் ,முதன்மைச் செயலாளர் / தொழிலாள்ர் ஆணையர் முனைவர் அப்துல் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)