Chess Olympiad 2022: மயிலாடுதுறை: நடுரோட்டில் நடைபெற்ற செஸ் விளையாட்டு போட்டி - மாணவ மாணவிகள் கடும் அவதி!
மயிலாடுதுறையில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டிக்காக அழைத்துவரப்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கடும் வெயிலில் போக்குவரத்துக்கு இடையே சாலையில் காக்க வைக்கப்பட்டனர்.
சர்வதேச அளவில் 44 வது 'செஸ் ஒலிம்பியாட்' சதுரங்க போட்டிகள் வருகிற நாளை 28 -ம் தேதி முதல் அடுத்த மாதம் ஆகஸ்டு 10 -ம் தேதி வரை செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தமிழக அரசு இந்த போட்டிகளை சிறப்பாக நடத்த திட்டமிட்டு உள்ளது. இந்த போட்டியில் 188 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்று விளையாட உள்ளனர். சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தொடக்க விழா நடைபெறுகிறது. விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
மேலும், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'செஸ் ஒலிம்பியாட்' போட்டி தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் "நம்ம செஸ், நம்ம பெருமை" என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் விளம்பரங்களும் செய்யப்பட்டு வருகின்றன. சர்வதேச 44 ஆவது ஒலிம்பியாட் செஸ் விளையாட்டு போட்டி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு பல்வேறு விளம்பரங்களையும் செய்து வருகிறது.
சர்வதேச 44 வது ஒலிம்பியாட் 2022 ஐ முன்னிட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சாலையில் உள்ள காவிரிபாலம் செஸ் போர்டு வண்ணம் தீட்டப்பட்டு காவிரி பாலத்தில் பொது தொழிலாளர் சங்கம் சார்பில் செஸ் விழிப்புணர்வு போட்டி இன்று நடத்தப்பட்டது. மாலை 3.45 மணிக்கு துவங்கும் இந்த போட்டியை மாவட்ட ஆட்சியர் லலிதா துவங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் காவிரி ஆற்றுப் பாலத்தில் மதியம் மூன்று மணிக்கு அழைத்து வரப்பட்டனர். சுட்டெரிக்கும் வெயிலில் எந்தவித பந்தலும் அமைக்காமல் செஸ் போர்டுடன் வெய்யிலில் அமரவைக்கப்பட்டிருந்தனர்.
ஆனால், நீண்ட நேரமாகியும் போட்டி ஏற்பாட்டாளர்கள் மற்றும் அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை. இதனால் போக்குவரத்து சாலையில் வாகனங்களில் இரைச்சல் மற்றும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகைகளுக்கு இடையே நீண்டநேரம் காத்திருந்த மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். அதனைத் தொடர்ந்து 2 மணி நேரம் கால தாமதத்திற்கு பிறகு மாலை 5 மணிக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், அவர்களைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் உள்ளிட்டோர் வந்து போட்டிகளை தொடங்கி வைத்தனர்.
போட்டி முடிந்து 6 மணிக்கு பரிசு சான்றிதழ் வழங்கி விழா நிறைவடைந்தது. வெயிலில் எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் மாணவர்களை போட்டியில் பங்கேற்க செய்தது பல்வேறு தரப்பினரை அதிர்ச்சியடைய வைத்தது மட்டும் இன்றி பல தரப்பில் இருந்து கண்டன குரல்களும் எழுந்துள்ளது.