ABP Nadu EXCLUSIVE: சூறைக் காற்று, சூழ்ந்த இருள், குளிர்ந்த சென்னை: என்ன காரணம்? வானிலை ரமணன் பேட்டி!
அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்த நிலையில், பலத்த காற்று வீசி வருகிறது.
கொளுத்தும் கோடை வெயில் அனைத்து மக்களையும் படுத்தி எடுத்த நிலையில், திடீரென சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் சாரல் வீசி வருகிறது.
தமிழகத்தில் கோடை வெயில் சதமடித்து வருகிறது. அனல் தாங்க முடியாமல் மக்கள் அலறி வருகின்றனர். இன்று (மே 30) மதியம் வரை சென்னையில் வெயில் பின்னியெடுத்த நிலையில், 4 மணியில் இருந்து சட்டென்று வானிலை மாறியுள்ளது. சூறைக் காற்று வீசி வரும் நிலையில், பகல் நேரத்திலேயே இருள் சூழ்ந்துள்ளது. மெரினா கடற்கரையில் புழுதிக் காற்று வீசி வரும் நிலையில், சாரல் மழை பெய்து வருகிறது. அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்த நிலையில், பலத்த காற்று வீசி வருகிறது.
வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?
அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்திற்குள் பொன்னேரி, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, திருத்தணி பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் அம்பத்தூர், பூவிருந்தவல்லி, சோளிங்கர், ஸ்ரீபெரும்புதூர், மாதவரம் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''அண்ணா நகர் மேற்கு, முகப்பேர், போரூர், அம்பத்தூர், மணப்பாக்கம், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் மழை பெய்யலாம். தமிழ்நாட்டில் வேலூர் மிகுந்த வெப்பமான பகுதியாக நேற்று இருந்த நிலையில், அது தொடரும்'' என்று தெரிவித்துள்ளார்.
சென்னையின் திடீர் மாற்றம் குறித்து, சென்னை வானிலை மைய முன்னாள் இயக்குநர் ரமணன் ABP Nadu-விடம் பேசினார். அவர் கூறும்போது, ''வெப்பச் சலனமே இன்றைய திடீர் மாறுதலுக்குக் காரணம். ஆந்திராவில் இருந்து தமிழ்நாடு எல்லையை நோக்கிக் காற்று வீசுகிறது.
இதனால் இன்னும் சில மணி நேரங்களுக்கு சென்னையில் தூறல், இடியுடன் கூடிய மழை இருக்கும். நாளை வானிலைக்கு ஏற்ப மழை வாய்ப்பு மாறும். அரசிடம் இருக்கும் அளவுக்கு ராடார் வசதிகள் என்னிடம் இல்லாததால், எல்லாவற்றையும் துல்லியமாகச் சொல்லிவிட முடியாது'' என்று ரமணன் தெரிவித்தார்.
எது எப்படியோ, சட்டென்று மாறிய வானிலையால் சென்னை மக்கள் மழைக் காற்றை மகிழ்வுடன் வரவேற்று வருகின்றனர். அத்துடன் நிற்காமல், செல்ஃபி எடுத்தும் ரசித்து வருகின்றனர்.