Chennai Nagai ECR: வந்தாச்சு புது ரூட்..! 2 மணி நேரம் மிச்சம் - சென்னை டூ நாகை, ஈசிஆர் 38 கி.மீ., நான்கு வழி சாலை ரெடி
Chennai Nagai ECR Stretch: சென்னை - நாகப்பட்டினம் இடையேயான பயண நேரத்தில் 2 மணி நேரத்தை குறைக்கும் வகையில், 38 கிலோ மீட்டர் நீள ஈசிஆர் சாலை தயார் நிலையை எட்டியுள்ளது.

Chennai Nagai ECR Stretch: புதுச்சேரி தொடங்கி கடலூர் அருகே பூண்டியான்குப்பம் பகுதியில் முடிவடையும் 38 கிலோ மீட்டர் நான்கு வழி சாலையின் பணிகள் முடிவுற்றுள்ளன.
சென்னை டூ நாகை - ஈசிஆர் சாலை விரிவாக்கம்
சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடலூர், சிதம்பரம், சீர்காழி மற்றும் நாகப்பட்டினர்ம் நோக்கி செல்லும் பயணிகளுக்கு, பயணத்தை வேகமானதாகவும், எளிதாகனதகாவும் மாற்றுவதோடு, பயண நேரத்திலும் 2 மணி நேரத்தை சேமிக்கக் கூடிய வகையிலான ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. அதன்படி, புதுச்சேரி தொடங்கி கடலூர் அருகே பூண்டியான்குப்பம் பகுதியில் முடிவடையும், 38 கிலோ மீட்டர் நீளத்திற்கான நான்கு வழி சாலை பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பூர்த்தி செய்துள்ளது.
ரூ.1,588 கோடி செலவு - 2 மணி நேரம் கட்
பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் முதற்கட்டமாக, சுமார் ஆயிரத்து 588 கோடி ரூபாய் செலவில் இந்த பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. ஈசிஆர் சாலையை விரிவுபடுத்தும் பணியில் இது ஒரு மைல்கல் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் நாகப்பட்டினம் இடையேயான 320 கிலோ மீட்டர் தூர பயண நேரத்தில் 2 மணி நேரத்தை சேமிக்க முடியும். அதாவது இனி நீங்கள் சென்னையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு காரில் சென்றால் 7 முதல் 6 மணி நேரத்திலும், பேருந்தில் சென்றால் 7 முதல் 9 மணி நேரத்திலும் இலக்கை அடைய முடியும் என கூறப்படுகிறது.
80 கிமீ மட்டுமே மிச்சம்:
புதுச்சேரி - பூண்டியான்குப்பம் இடையேயான பணிகள் முடிவடைந்ததால், திருவான்மியூர் தொடங்கி நாகப்பட்டினம் வரையிலான, 300 கிலோ மீட்டர் ஈசிஆர் சாலையில் 220 கிலோ மீட்டர் தூரத்திற்கான சாலைகள் நான்கு வழி சாலைகளாக அகலப்படுத்தப்பட்டுள்ளன. அதோடு, அந்த சாலைகள் பயன்பாட்டிற்கும் வந்து இருப்பதால் மாநிலத்தின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு இடையேயான சாலை இணைப்பு பெரிய அளவில் மேம்பட்டுள்ளது.
மரக்காணம் டூ புதுச்சேரி ப்ளான்:
பணிகள் முடிவுற்ற புதுச்சேரி - பூண்டியான்குப்பம் ஈசிஆர் சாலை பிரிவை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி அக்டோபர் 13 ஆம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கிறார். அதோடு, 300 கிமீ நீளத்திற்கான ஈசிஆர் சாலையை அகலப்படுத்தும் திட்டத்தின் இறுதிப் பகுதியான, 46 கிமீ மரக்காணம்-புதுச்சேரி பாதையின் நான்கு வழிச்சாலைப் பணிக்கும் அடிக்கல் நாட்ட உள்ளார்.
ஈசிஆர் சாலை விரிவாக்கத்தின் பலன்கள்:
300 கிலோ மீட்டர் நீளத்திற்கான ஈசிஆர் சாலை விரிவாக்க பணிகள் முற்றிலுமாக முடிவுறும்போது, அது மாநிலத்திண் போக்குவரத்து தொடங்கி பொருளாதார வளர்ச்சி வரை என, பல்வேறு விதங்களில் பயனுள்ளதாக இருக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு வழி மற்றும் ஆறு வழிச்சாலைகளை உருவாக்குவதும் அடங்கும். iது பல நகரங்களுக்கான பயண நேரத்தை கணிசமாக குறைக்கும்.
- உதாரணமாக, திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரையிலான பயணத்தை ஒரு மணி நேரத்திலிருந்து வெறும் 15-20 நிமிடங்களாகக் குறைக்கக் கூடும்.
- புதிய புறவழிச்சாலை கடலூர் மற்றும் அதற்கு அப்பால் செல்லும் வாகனங்கள் சுற்றுலா நகரமான புதுச்சேரிக்குள் நுழைவதைத் தடுக்கும். இதனால் நெரிசல் மிக்க நகர் பகுதிக்குள் சென்று வெளியேற தவிக்கும் சூழல் தவிர்க்கப்படும்
- அகலமான சாலைகள் கனரக வாகனங்கள் எளிதாக இயங்கவும், சென்னை மற்றும் தூத்துக்குடி போன்ற முக்கிய துறைமுக நகரங்களுக்கு இடையே சரக்குகளை சீராகவும் வேகமாகவும் கொண்டு செல்வதற்கு உதவும், வர்த்தகம் மற்றும் தொழில்துறை உற்பத்தியைத் தூண்டும்.
- விரிவுபடுத்தப்பட்ட ஈசிஆர் சாலைகள் கடலோர மாவட்டங்களை தமிழ்நாட்டின் மத்திய பகுதிகள் மற்றும் பிற மாநிலங்களுடன் இணைக்கின்றன. புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையின் அகலப்படுத்தல் போன்ற திட்டங்கள் தாம்பரம்-திருச்சி பாதைக்கு சிறந்த இணைப்புகளை உருவாக்குகின்றன.
- சென்னை, மகாபலிபுரம், புதுச்சேரி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட பல பிரபலமான கடலோர நகரங்கள் மற்றும் சுற்றுலா தலங்களை ECR இணைக்கிறது. எனவே அதனை மேம்படுத்துவது சுற்றுலாப் பயணிகளுக்கு பயணத்தை மிகவும் வசதியாக மாற்றும் மற்றும் உள்ளூர் சுற்றுலா துறையை மேம்படுத்தும்
- மேம்படுத்தப்பட்ட வசதிகள் ECR வழித்தடத்தில் ரியல் எஸ்டேட் வளர்ச்சியை உந்தித் தள்ளி சொத்து மதிப்புகளை அதிகரிப்பதோடு மாநிலத்திற்கு புதிய முதலீட்டையும் ஈர்க்கின்றன.





















