Floating Restaurant: சென்னை முட்டுக்காட்டில் மிதக்கும் உணவகம்: எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
சென்னை முட்டுக்காட்டில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரம்மாண்டமான மிதக்கும் உணவகக் கப்பல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை தமிழக சுற்றுலாத் துறை மேற்கொண்டுள்ளது.
சென்னை முட்டுக்காட்டில் அமைக்கப்பட்டுவரும் மிதக்கும் உணவகப் பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் நிறைவுபெறும் என்று அப்பணிகளை நேரில் ஆய்வு செய்த சுற்றுலாத் துறை அமைச்சர் ச.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை முட்டுக்காட்டில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரமாண்டமான மிதக்கும் உணவகக் கப்பல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை தமிழக சுற்றுலாத் துறை மேற்கொண்டுள்ளது.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் இதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது 3 மாதங்களில் பணி நிறைவுபெறும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அங்கு நடைபெறும் பணிகளை சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் பார்வையிட்டார். அப்போது அவரிடம் கட்டுமானப் பணிகள் அனைத்தும் இன்னும் ஒரு மாதத்தில் நிறைவு பெறும் என்று எடுத்துரைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
எதற்காக மிதவை உணவகம்?
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் 'போட் ஹவுஸ்' இயங்கி வருகிறது. இந்த போட் ஹவுஸில் பொதுமக்கள் சாகச பயணம் மேற்கொள்ள மிதவை படகுகள், மோட்டார் படகுகள், விரைவு படகுகள் ஆகியவை இயக்கப்பட்டு வருகின்றன. பல ஆண்டு காலமாக இயங்கி வரும் இந்த படகு இல்லங்கள் மீதான ஈர்ப்பு சென்னை மக்களுக்கு குறைந்து விட்டதை அடுத்து அதனை மேலும் பெரிதாக்க முடிவு செய்யப்பட்டது. சுற்றுலாப் பயணிகளையும், சென்னை வாசிகளின் வீக்கெண்ட் விசிட்களையும் அதிக அளவில் ஈர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, 5 கோடி ரூபாய் செலவில் 125 அடி நீளம், 25 அடி அகலம் கொண்ட இரண்டு அடுக்கு மிதக்கும் உணவகக் கப்பலை இந்த படகு இல்லம் அறிமுகப்படுத்த உள்ளது.
சிறப்பம்சங்கள் என்னென்ன?
இந்த கப்பல் உணவகம், தமிழகத்தின் முதல் மிதக்கும் உணவகமாக வர உள்ளது.
இந்த ரெஸ்டாரண்ட் க்ரூஸ் கப்பல் இரண்டு அடுக்குகளுடன் கட்டப்படும்.
இதன் அமைப்பு 125 அடி நீளம் மற்றும் 25 அடி அகலத்தில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
உணவகத்தின் தரை தளம் முழுவதும் ஏ/சி வசதியுடன் வரும்.
முதல் தளம் திறந்த வெளியாக வடிவமைக்கப்பட உள்ளது.
சமையலறை, சேமிப்பு அறை, கழிப்பறை, இயந்திர அறை ஆகியவை இதனுள்ளேயே கட்டப்பட உள்ளன.
இந்தக் கப்பல் 60 குதிரை ஆற்றல் திறனுடைய இயந்திரம் மூலம் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.
அமைச்சர் தொடங்கி வைத்த திட்டம்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் கொச்சின் கிராண்டியர் மரைன் இன்டர்நேஷனல் ஆகியவற்றின் மூலம் தனியார் மற்றும் பொது பங்களிப்பு திட்டத்தின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். பல முக்கிய அம்சங்கள் கொண்ட இந்த கப்பல் உணவகம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், இன்று செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு படகு இல்லத்தில் மிதவை படகு உணவகம் கட்டுமான பணியை துவக்கிவைத்த போது.
— K Ramachandran (@Ramachandranmla) March 24, 2023
உடன் திருப்போரூர் MLA திரு.எஸ் பாலாஜி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.@arivalayam @DMKNilgiris pic.twitter.com/E5YRrWlBZq